சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவுக்கு விஜயம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) இந்த வாரம் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வார் என்பதை சீன அரசு உறுதி செய்துள்ளது.
அவர் சீன ஜனாதிபதி Xi Jinping ஐ சந்திக்கவுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் ஒரு தசாப்தத்திற்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் சீனாவுக்கு செல்லும் முதல் பயணமாகும் இதுவென தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு, உலகின் இரு பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான உறவுகளில் முக்கியமான தருணமாக பார்க்கப்படுகிறது.
Boeing, Citigroup, Qualcomm உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களின் நிர்வாகிகள், ட்ரம்புடன் பயணித்து சீன நிறுவனங்களுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, 2025 ஏப்ரலில் ட்ரம்ப் உலக நாடுகளுக்கு விதித்த உயர்ந்த இறக்குமதி வரிகள் காரணமாக அமெரிக்கா–சீனா இடையே கடுமையான வர்த்தகப் போர் உருவானது.
இரு நாடுகளும் 100% க்கும் அதிகமான வரிகளை விதித்தன. பின்னர் சில சமரச முயற்சிகளால் அவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், பதற்றம் தொடர்ந்து நிலவுகிறது.




