இலங்கை செய்தி

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்துங்கள்: கடற்படை தளபதியிடம் ஆளுநர் கோரிக்கை

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார்.

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கேட்டுக்கொண்டார்.

புதிதாகப் பொறுப்பேற்ற வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன, இன்று (12.08.2026) புதன்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியபோதே ஆளுநர் இந்த விடயங்களை வலியுறுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கும் கடல்வளப் பாதுகாப்புக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தலாக காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, சட்டவிரோத மீன்பிடி முறைகள் கடல் வளங்களை அழிப்பதுடன், உள்ளூர் மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடித் தொழிலையும் பாதித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் ஆளுநர் கவனம் செலுத்தினார்.

இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்துடன் நெருங்கிய ஒருங்கிணைப்பில் செயற்பட்டு, சட்ட அமுலாக்க நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அவர் வட மாகாண கடற்படைத் தளபதியிடம் கேட்டுக்கொண்டார்.

கடல் வழியாக நாட்டிற்குள் உயிர்கொல்லி போதைப்பொருட்கள் கடத்தப்படும் முயற்சிகளை முறியடிப்பதற்கான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் வலியுறுத்தினார்.

வடக்கு கடற்பரப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக கடற்படை தொடர்ந்தும் உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த வட மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன அவர்கள், வடக்கு மாகாண மக்களின் பாதுகாப்பு, கடல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் கடற்படை தொடர்ந்தும் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படும் எனத் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை