சோவியத் காலத்து ஆயுதங்களை பழுதுபார்க்க ரஷ்யாவின் உதவியை நாடிய தலிபான்கள்!
ஆப்கானிஸ்தானின் ஆயுதக் கிடங்குகளை பழுதுபார்க்க தலிபான்கள் ரஷ்யாவின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ரஷ்யா ஆதரவு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்களுடன் செய்துக்கொள்ளப்பட்ட இராணுவ ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் கடந்த வாரம் மொஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு மன்றத்தில் கையெழுத்தானது.
இதற்கமைய 1989 ஆம் ஆண்டில் சோவியத் படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியபோது கைவிட்டுச் சென்ற நூற்றுக்கணக்கான பழைய டாங்கிகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் இராணுவ வாகனங்களை தலிபான்கள் பழுதுபார்க்கவுள்ளனர்.
தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சோவியத் ஆயுதக் கிடங்கில் T-55 மற்றும் T-62 டாங்கிகள், BMP-1 மற்றும் BMP-2 காலாட்படை சண்டை வாகனங்கள், மற்றும் Mi-17 மற்றும் Mi-24 ஹெலிகாப்டர்கள் ஆகியவை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் 2021 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியபோது கணிசமான ஆயுதங்களை விட்டுச் சென்றனர்.
இந்த ஆயுதங்களையும் தலிபான்கள் பயன்படுத்த முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.




