கடமை தவறிய அதிகாரிக்கு இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
மும்பை மாநகராட்சிக்கு (BMC) சொந்தமான நிலத்தில் இடம்பெற்றுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான உத்தரவை நிறைவேற்றத் தவறியதையடுத்து, மாநகராட்சி ஆணையர் அஷ்வினி பிதேவின் மாதச் சம்பளத்தை நிறுத்தி வைக்குமாறு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறியதாகக் குற்றஞ்சாட்டி, ஆணையருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது என விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அவருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மும்பையின் போரிவலி பகுதியில், பிரிஹன்மும்பை மின்சாரம் மற்றும் போக்குவரத்துச் சேவையின் (BEST) பேருந்து நிலையம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
கடந்த 2025ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதியும், 2026ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதியும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மாநகராட்சி நிர்வாகம் உரிய காலத்திற்குள் நடைமுறைப்படுத்தவில்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த பேருந்து நிலையத்திற்காக 3,400 சதுர மீற்றர் நிலத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்குமாறு தனியார் அபிவிருத்தி நிறுவனத்திற்கு 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அத்துடன், அந்த நிலத்தைப் பொறுப்பேற்று மூன்று மாதங்களுக்குள் பேருந்து நிலையத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருமாறும் மாநகராட்சிக்கு அறிவுறுத்தியிருந்தது.
எனினும், அந்த நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால், மாநகராட்சியின் நடவடிக்கையின்மை குறித்து நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், கூடுதலாக 30 நாட்கள் கால அவகாசம் வழங்குமாறு மாநகராட்சி நிர்வாகம் முன்வைத்த கோரிக்கையையும் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நிராகரித்துள்ளது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை நிறைவேற்றிய பின்னரே மேலதிக நிவாரணங்களைக் கோர முடியும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், மாநகராட்சி ஆணையர் மற்றும் அவரது தனிப்பட்ட பணியாளர்களுக்கான மாதச் சம்பளத்தை வழங்குவதை மும்பை மாநகராட்சி மற்றும் மகாராஷ்டிர மாநில அரசாங்கம் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிப்பாளர்களுடன் இணைந்து மாநகராட்சி அதிகாரிகள் செயற்படுவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அவர்களைப் பாதுகாப்பதாகவும் நீதிமன்றம் தனது வாய்மொழி அவதானிப்புகளில் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.




