அமெரிக்காவில் அப்துல் சாதனை; இந்தியாவில் அரசியல் அடையாளத்துக்கு ஒவைசி அழைப்பு
அமெரிக்காவின் மிச்சிகன் மாநில செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் எல்-சயீத் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களும் தங்களது அரசியல் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும் என அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செனட்டுக்குத் தெரிவுசெய்யப்பட்ட முதல் முஸ்லிம் என்ற வரலாற்றுச் சாதனையை அப்துல் எல்-சயீத் படைத்துள்ளமை குறித்து கருத்துத் தெரிவித்த ஒவைசி, இந்த வெற்றி இந்தியாவிலுள்ள முஸ்லிம் வாக்காளர்களுக்கும் முக்கியமான செய்தியை எடுத்துரைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“மிச்சிகனில் ஓர் அப்துல் வெற்றி பெற்றுள்ளார். இப்போது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் தனது அரசியல் அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும்” என ஒவைசி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், “‘அப்துல்’ என்ற பெயரை ஏளனமாகப் பயன்படுத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள் பெரும் முயற்சி செய்துள்ளனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அப்துல் அடிபணிய மாட்டார் என்பதை வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனிமேல் நாம் யாருக்கும் அடிபணியப் போவதில்லை” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
தேர்தல் காலங்களில் சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் அவர்களை அணுகினாலும், அதற்குப் பதிலாக உரிய அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை என்ற விமர்சனத்தையே ஒவைசி தனது கருத்தின் மூலம் முன்வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு மொத்த வாக்காளர்களில் முஸ்லிம்கள் சுமார் ஐந்தில் ஒரு பங்கினராக உள்ளனர். இந்நிலையில், ‘அப்துல்’ என்ற பெயர் சிறுபான்மை சமூகத்தினரைக் குறிக்கும் வகையில் அரசியல் விவாதங்களிலும் சமூக ஊடகங்களிலும் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) முஸ்லிம்களை இலக்குவைப்பதாகவும், சமாஜ்வாதி கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் முஸ்லிம் சமூகத்தை வெறுமனே வாக்கு வங்கியாகப் பயன்படுத்துவதாகவும் ஒவைசியின் கட்சி தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வருகிறது.
மிச்சிகன் செனட் தேர்தலில் அப்துல் எல்-சயீத் வெற்றி பெற்றதாக அமெரிக்கத் தொலைக்காட்சி ஊடகங்கள் அறிவித்த சில மணிநேரங்களுக்குப் பின்னரே ஒவைசியின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.




