பிரித்தானியாவை தாக்கும் ஆஸ்டன்புயல் – கனமழை தொடர்பில் எச்சரிக்கை
பிரித்தானியாவில் நாளை மற்றும் வார இறுதி நாட்களில் ஆஸ்டன் புயல் தாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புயலானது மணிக்கு 80 மைல் வேகத்தில் கடுமையான காற்றையும், கனமழையையும் கொண்டு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் காற்றுக்கான ஆரஞ்சு நிற வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதேநேரம் இன்று நள்ளிரவு முதல் நாளை (23.10) பிற்பகல் வரை தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் காற்றுக்கான மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், ஸ்காட்லாந்தின் சில பகுதிகளுக்கு சனிக்கிழமை அதிகாலை வரை மஞ்சள் நிற எச்சரிக்கை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்படி புயல் நிலைமையின் காரணமாக மின்வெட்டு, பயண இடையூறுகள், கட்டிட சேதம் மற்றும் கடலோரச் சாலைகளில் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை வார இறுதி மற்றும் அடுத்த வாரம் முழுவதும் இங்கிலாந்து முழுவதும் நிலையற்ற வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், குறைந்த காற்றழுத்தமானது வடக்குப் பகுதிகளுக்கு வலுவான காற்றைக் கொண்டுவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





