இலங்கை, அமெரிக்க படைகளின் கூட்டு பயிற்சி திருமலையில் ஆரம்பம்
இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பு, மனிதாபிமானப் பதிலளிப்பு மற்றும் பேரிடர் தயார்நிலையை வலுப்படுத்தும் நோக்கிலான , கடலோர ஒத்துழைப்பு தயார்நிலை மற்றும் பயிற்சி (CARAT) யின் 6வது கட்டத்தை அமெரிக்காவும் இலங்கையும் தொடங்கியுள்ளன.
திருகோணமலை மற்றும் கொழும்பில் ஜூலை 27 முதல் 31 ஆம் திகதி வரை இலங்கை கடற்படையால் நடத்தப்படும் “CARAT ஸ்ரீலங்கா 2026” பயிற்சி, இரு நாடுகளின் படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பையும் நம்பிக்கையையும் மேம்படுத்தும் நோக்கில், முன்னெடுக்கப்படுகிறது.
இந்த ஒரு வார கால தரை மற்றும் கடல் சார்ந்த பயிற்சியில், அமெரிக்க கடற்படை, அமெரிக்க கடலோரக் காவல்படை, சிறிலங்கா கடற்படை மற்றும் சிறிலங்கா விமானப்படை ஆகியவற்றின் படையினர் பங்கேற்கின்றனர்.
2017 முதல், CARAT ஸ்ரீலங்கா பயிற்சியானது, நீடித்த அமெரிக்க-சிறிலங்கா பாதுகாப்பு கூட்டாண்மைக்கு அடித்தளமாக விளங்கும் நம்பிக்கை, அனுபவம் மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்பை உருவாக்க உதவியுள்ளது என சிறிலங்காவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
“இந்தப் பயிற்சி, சிறிலங்காவுடனான எமது பாதுகாப்பு கூட்டாண்மைக்கு அமெரிக்கா கொண்டுள்ள நீடித்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது,” என்று அமெரிக்கத் தூதரகத்தின் மூத்த பாதுகாப்பு அதிகாரியும், சிறிலங்காவுக்கான பாதுகாப்பு தூதுவருமான லெப்டினன்ட் கேணல் மத்யூ ஹவுஸ் கூறினார்.
“எமது மாலுமிகள் தோளோடு தோள் சேர்ந்து பயிற்சி செய்யும்போது, மிகவும் முக்கியமான தருணங்களில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மிகவும் திறம்பட செயற்பட உதவும் நம்பிக்கை, ஒருங்கிணைந்து செயற்படும் திறன் மற்றும் தொழில்முறை உறவுகளை அவர்கள் வளர்த்துக் கொள்கிறார்கள்.
கடந்த ஆண்டு டிட்வா புயலின்போது நாங்கள் இதை நேரடியாகக் கண்டோம். பல ஆண்டுகால ஒத்துழைப்பின் மூலம் கட்டப்பட்ட உறவுகள், இலங்கை மக்களுக்கு ஆதரவாக நமது படைகள் ஒன்றோடொன்று தடையின்றி இணைந்து செயற்பட வழிவகுத்தன.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பயிற்சியில் அமெரிக்கக் கடற்படையின் பி-8ஏ பொசிடோன் கடல்சார் ரோந்து மற்றும் உளவு விமானம் பங்கேற்கிறது.
இது கடல்சார் கள விழிப்புணர்வுப் பயிற்சி மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, இந்தியப் பெருங்கடல் முழுவதும் கடல்சார் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கும் சம்பவங்களுக்குப் பதிலளிப்பதற்கும், இரு கடற்படைகளின் திறனை வலுப்படுத்தவும் உதவும்.
அமெரிக்கக் கடலோரக் காவல்படையின் கடல்சார் ஈடுபாட்டுக் குழு (MET), அமெரிக்காவினால் வழங்கப்பட்ட முன்னாள் அமெரிக்கக் கடலோரக் காவல்படை கப்பலான டக்ளஸ் மன்ரோவான எஸ்எல்என்எஸ் கஜபாகு (P626) கப்பலில் பயிற்சி பெறுவதோடு, கடல்சார் நடவடிக்கைகளின் போது அமெரிக்காவினால் வழங்கப்பட்ட காற்றடைக்கப்பட்ட படகையும் (RHIB) பயன்படுத்தும்.
இது, அமெரிக்கப் பாதுகாப்பு உதவி சிறிலங்காவின் நீண்டகால கடல்சார் திறன்களைக் கட்டமைக்க எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கும்.
அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படையினர், வாரம் முழுவதும் கடல்சார் கள விழிப்புணர்வு, தந்திரோபாய மருத்துவம், வெடிபொருள் அகற்றுதல், மற்றும் சென்று பார்த்து, ஏறி, தேடி, கைப்பற்றுதல் (VBSS) நடவடிக்கைகள் ஆகியவற்றில் வகுப்பறைப் பரிமாற்றங்கள் மற்றும் நேரடிப் பயிற்சிகளில் பங்கேற்பார்கள்.
பின்னர், அந்தக் திறன்களைக் கடலில் ஒன்றாகப் பயன்படுத்துவார்கள்.
படை வீரர்களிடையே தனிப்பட்ட உறவுகளை வலுப்படுத்தும் சமூக சேவைத் திட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கலாசாரப் பரிமாற்றங்கள் ஆகியவை CARAT சிறிலங்காவின் மற்றொரு முக்கிய பகுதியாகும்.
அந்தத் தொடர்புகள், ஒரு நெருக்கடி ஏற்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே நம்பிக்கையை உருவாக்குகின்றன. இதன் மூலம், தேவைப்படும் போதெல்லாம் எமது படைகள் திறம்பட இணைந்து செயல்படுவதை உறுதிசெய்ய உதவுகின்றன.
உலகின் மிகவும் பரபரப்பான கடல்வழிப் பாதைகளில் ஒன்றில் இலங்கை அமைந்துள்ளதால், எமது கடற்படைகள் இணைந்து செயல்படும் திறன் முக்கியத்துவம் வாய்ந்தது.
CARAT திட்டத்தின் மூலம், அமெரிக்காவும் இலங்கையும், நாடுகடந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், இயற்கை பேரிடர்களுக்கு பதிலளிப்பதற்கும், மற்றும் இந்தியப் பெருங்கடலின் முக்கிய கடல்வழிப் பாதைகளை உலகளாவிய வர்த்தகத்திற்காகப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுவதற்கும் தேவையான கூட்டாண்மைகளையும் நடைமுறைத் திறன்களையும் வலுப்படுத்துகின்றன என்றும் அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.




