நீட் தேர்வுப் போராட்டம்: வழக்குகள் வாபஸ்
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பிஹார் மற்றும் அசாம் மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
நீட் வினாத்தாள் கசிவு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஜூலை 25 அன்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
எனினும், வழக்குகள் முழுமையாகத் திரும்பப் பெறப்படவில்லை எனப் போராட்டக் குழுவினர் குற்றம் சாட்டி மீண்டும் போராட்டம் நடத்த எச்சரித்த நிலையில், பிஹார் அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிஹார் காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “பிஹார் பந்த் போராட்டத்தின் போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட 694 பேரில், 339 சிறார்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 355 பேர் மீதான வழக்குகள் தற்போதைய அரசின் முடிவின்படி திரும்பப் பெறப்பட்டு, அவர்களும் விடுவிக்கப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் அசாம் அரசும், போராட்டம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 13 பேரை விடுவிப்பதற்கான மறுஆய்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது.





