கத்துக் குட்டியாக களமிறங்கி உச்சம் தொட்ட ஆப்கானிஸ்தான்
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஒருநாள் சர்வதேச ODI அணிகளுக்கான தரவரிசையில் இலங்கையை பின்னுக்குத் தள்ளி ஆப்கானிஸ்தான் அணி ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் எட்டியுள்ள மிக உயர்ந்த தரவரிசை இதுவாகும்.
புதிய தரவரிசையில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு அணிகளும் தலா 94 புள்ளிகளைப் பெற்றுள்ளன. இருப்பினும், தரவரிசை அடிப்படையில் ஆப்கானிஸ்தான் ஆறாவது இடத்திலும் இலங்கை ஏழாவது இடத்திலும் உள்ளன.
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-0 எனக் கைப்பற்றியதுடன், அண்மையில் நிறைவடைந்த சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்ற முத்தரப்புத் தொடரிலும் தோல்வியின்றிப் போட்டிகளை நிறைவு செய்தமை ஆப்கானிஸ்தானின் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
2009ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான ஆப்கானிஸ்தான், இதுவரை விளையாடிய 191 போட்டிகளில் 96 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.
இதேவேளை, 2025ஆம் ஆண்டு நான்காவது இடம் வரை முன்னேறியிருந்த இலங்கை அணி, தற்போது ஏழாவது இடத்துக்குச் சரிந்துள்ளது.
எனினும், இந்தத் தரவரிசைச் சரிவு 2027ஆம் ஆண்டு ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை பங்கேற்பதைப் பாதிக்காது. 2026 செப்டெம்பர் 30ஆம் திகதிய தரவரிசையின் அடிப்படையில் உலகக் கிண்ணத்துக்கான நேரடித் தகுதியை இலங்கை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது. போட்டியை நடத்தும் தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகளும் நேரடித் தகுதி பெற்றுள்ளன.
தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும், தென்னாபிரிக்கா மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் நான்காவது இடத்திலும், அவுஸ்திரேலியா ஐந்தாவது இடத்திலும் உள்ளன.





