பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இலங்கை, பாகிஸ்தான் ஆராய்வு!
இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இலங்கையில் அவருடைய பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அத்துடன், இரு தரப்பினரும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு கூட்டிணைப்பு ஆகியவற்றை மேலும் வலுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
மேலும், இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தி, தொடர்ச்சியான தொடர்புகளை பேணுவதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், அனர்த்த முகாமைத்துவம் தேசிய பாதுகாப்பின் ஓர் அங்கமாக மாறியுள்ளதை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டதுடன், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அனர்த்தங்களின் அதிகரித்துவரும் தன்மையை முன்னிட்டு, முன்கூட்டிய, ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் தொழில்நுட்ப ஆதரவு கொண்ட பதிலளிப்புகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
அதேவேளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட எல்லை தாண்டிய கடல்சார் குற்றச்செயல்களின் அதிகரித்துவரும் அச்சுறுத்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த சவால்களை பயனுள்ள முறையில் எதிர்கொள்ள மேலதிக தொழில்நுட்ப மற்றும் கூட்டாண்மை சார்ந்த உதவிகள் தேவையென இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
இச்சந்திப்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு ஆலோசகரும் கலந்துகொண்டார்.





