இலங்கை, வியட்நாமுக்கிடையில் நாளை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To Lam), இன்று (07) இரவு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தருகிறார்.
இலங்கைக்கும் வியட்நாமிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 55 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில், 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியட்நாமுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுத்த அழைப்பிற்கு இணங்க, இந்த வருகை இடம்பெறுகிறது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நாடு நகரும் இத்தருணத்தில் இந்த விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு வியட்நாம் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும்.
வியட்நாம் ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நாளை (08) ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளதுடன், ஜனாதிபதி டோ லாம் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் பரஸ்பரம் முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
அதனைத் தொடர்ந்து வியட்நாம் அரச பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரச பிரதிநிதிகளுக்கும் இடையில் பல துறைகள் சார்ந்த பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
இந்த உயர்மட்ட தூதரகப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான இரு நாடுகளினதும் பொதுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில், பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதுடன், அதன் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து ஊடக அறிக்கையை வெளியிடவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, வியட்நாம் ஜனாதிபதி கொழும்பு பொது நூலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஹோ சி மின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தவுள்ளதுடன், கொழும்பு பொது நூலகத்தில் அமைந்துள்ள வியட்நாம்-ஹோ சி மின் வலயத்தில் (Vietnam-Ho Chi Minh Space) உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத் தொகுப்பையும் பார்வையிடவுள்ளார்.
அதன் பின்னர், வியட்நாம் ஜனாதிபதி இலங்கை பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன மற்றும் ஏனைய அரசியல் பிரதிநிதிகளுடன் வியட்நாம் ஜனாதிபதி நாளை (08) பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.




