இந்தியாவை துவம்சம் செய்த இலங்கை ஏ அணி
ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய ஏ அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்திய இலங்கை ஏ அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
கட்டாரின் டோஹாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 317 ஓட்டங்களைக் குவித்தது.
இந்திய அணியின் சார்பில் அபிஷேக் சர்மா 63 பந்துகளில் 78 ஓட்டங்களையும், அணித்தலைவர் திலக் வர்மா 66 பந்துகளில் 53 ஓட்டங்களையும் பெற்றனர். ஷாபாஸ் அஹமட் ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 54 ஓட்டங்களைக் குவித்தார். வைபவ் சூர்யவன்ஷி 40 ஓட்டங்களையும், தனுஷ் கோட்டியன் 28 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை ஏ அணியின் பந்துவீச்சில் ஜனித் லியனகே 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ரவிந்து பெர்னாண்டோ 60 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும், நிபுன் தனஞ்சய 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
318 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய இலங்கை ஏ அணி, லசித் குரூஸ்புள்ளே மற்றும் சினெத் ஜயவர்தன ஆகியோரின் அதிரடி சதங்களின் உதவியுடன் 41.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 318 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான இருவரும் முதலாவது விக்கெட்டுக்காக 174 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளமிட்டனர்.
சினெத் ஜயவர்தன 70 பந்துகளில் 10 பௌண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கலாக 105 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். லசித் குரூஸ்புள்ளே 107 பந்துகளில் 12 பௌண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கலாக 116 ஓட்டங்களைக் குவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய நிஷான் மதுஷ்க ஆட்டமிழக்காமல் 56 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பெற்றார். அணித்தலைவர் பவன் ரத்நாயக்க 16 பந்துகளில் 3 சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி அடங்கலாக ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்றார்.
மூன்றாவது விக்கெட்டுக்காக நிஷான் மதுஷ்க மற்றும் பவன் ரத்நாயக்க ஜோடி 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது.
இதன் மூலம் இலங்கை ஏ அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்று ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.




