iOS 16 ஐபோன்களில் பாதுகாப்பு குறைப்பாடு – ஹேக் செய்யப்பட்டதாக தகவல்
ஆப்பிள் கைபேசிகளைப் பயன்படுத்தும் மக்களின் வாட்ஸ்அப் கணக்குகளைக் கைப்பற்றுவதற்கான ஒரு புதிய தாக்குதல் குறித்து இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் வெளிப்படுத்தியுள்ளது.
ஜீரோ-கிளிக் என அறியப்படும் இந்த நடவடிக்கை, iOS 16 ஐபோன்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளைக் குறிவைப்பதாக அந்த மன்றம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பலர் ஏற்கனவே இது குறித்துப் முறைப்பாடு அளித்துள்ளனர். அதன்படி, நாட்டில் ஜீரோ-கிளிக் வாட்ஸ்அப் பாதுகாப்பு மீறல் நடைபெற்று வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தாலிய பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வின்படி, வாட்ஸ்அப்பின் இணைக்கப்பட்ட சாதன ஒத்திசைவு (Linked Device Synchronization) செயல்முறையைப் பாதிக்கும் பல பாதுகாப்பு குறைபாடுகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படுவதாக அந்த மன்றம் கூறியது.
தங்கள் வாட்ஸ்அப் கணக்குகளிலிருந்து பணம் கோரும் அங்கீகரிக்கப்படாத செய்திகள் வந்ததை அறிந்ததாகவும், கணக்கு அமைப்புகளில் சந்தேகத்திற்குரிய எதையும் காணவில்லை என்றும் இந்தத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சில சமயங்களில், பாதிக்கப்பட்டவர்களின் வாட்ஸ்அப் குழுக்களுக்கான நிர்வாக உரிமைகளையும் (admin rights) தாக்குதல் நடத்தியவர்கள் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளதாகவும் அந்த மன்றம் குறிப்பிட்டுள்ளது.
iOS 16.7.12-க்கு முந்தைய பதிப்புகளில் உள்ள சாதனங்களையும் இது பாதிக்கக்கூடும் என்றும், இது வழக்கமான தாக்குதல் முறைகளை விட மிகவும் சிக்கலான மற்றும் மேம்பட்ட தாக்குதல் முறையாகக் கருதப்படுகிறது என்றும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதன்படி, ஐபோன் பயனர்கள் உடனடியாகத் தங்களது iOS-ஐ சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பித்து, வாட்ஸ்அப்பின் சமீபத்திய புதுப்பிப்பையும் நிறுவுமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருபடி சரிபார்ப்பு மற்றும் அரட்டைப் பூட்டு அமைப்பைச் செயல்படுத்துமாறு பயனர்களுக்குத் தெரிவித்துள்ள இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம், வழக்கத்திற்கு மாறான பணக் கோரிக்கைகள் வந்தால், மற்றொரு நம்பகமான தகவல் தொடர்பு வழி மூலம் சரிபார்க்குமாறும் பயனர்களுக்குத் தெரிவித்துள்ளது.




