NPP ஆட்சியை வடகொரியாவுடன் ஒப்பிடுகிறது சஜித் அணி
“ஜனநாயகத்தை இல்லாதொழித்து இலங்கையை வடகொரியாபோல் ஆக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முயற்சித்துவருகின்றது.”- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
“நீதித்துறை விவகாரத்தில் கையடிப்பதற்காகவே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தற்போது பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது.
எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகங்களை ஒடுக்கும் முயற்சியாகவே இச்சட்டமூலம் முன்வைக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் உள்ளது.
எனவே, நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் மேற்படி சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படாவிட்டால் அதற்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம்.
தேசிய மக்கள் சக்தியினருக்கு மக்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியுள்ளனர். 88,89 காலப்பகுதியில் ஜே.வி.பியினர் எவ்வாறு செயல்பட்டனர் என்பதை மக்கள் மறந்துவிட்டனர்.
மேற்படி காலப்பகுதியில் துப்பாக்கிமூலம் செய்ய முடியாமல்போனதை இன்று சட்டப்பூர்வமாக செய்வதற்கு அக்கட்சியினர் முற்படுகின்றனர். அதனால்தான் ஜனநாயகத்தை அழித்து வடகொரியாபோல் ஆக்குவதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.” – என்றார் ஹர்ஷன ராஜகருண.




