பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் கலவரம் – 24 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் கலவரம் வெடித்துள்ளது.
இதன்காரணமாக அப்பகுதியில் முழு அடைப்பு அமுலில் உள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நீடித்த இந்தப் போராட்டங்களில் குறைந்தது 24 பேர் உயிரிழந்தனர்.
உள்ளூர் அதிகாரிகளுக்கும், சமீபத்தில் தடைசெய்யப்பட்ட கூட்டு அவாமி நடவடிக்கைக் குழுவின் (JAAC) ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் இஸ்லாமாபாத்திற்கு சவாலாக அமைந்துள்ளது.
இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் எழும் எதிர்ப்புகளை டெல்லி கையாளும் விதத்தை இஸ்லாமாபாத் அடிக்கடி விமர்சித்து வந்தாலும், தற்போது தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலேயே விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது.
அப்பகுதியின் 45 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஜுலையில் இடம்பெறவுள்ள நிலையில் அகதிகளுக்கு 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதை எதிர்த்து, JAAC அமைப்பால் ஜூன் 9 அன்று போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த போராட்டமே கலவரம் ஏற்படுவதற்கு வித்திட்டது.
இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரிலிருந்து இடம்பெயர்ந்த இந்த அகதிகள் பாகிஸ்தானில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை கண்டித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்ப்டுள்ளது.
மேற்படி போராட்டம் கலவரமாக மாறியதில் நான்கு அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும், 97 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 515 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய காவல்துறைத் தலைவர் லியாகத் அலி மாலிக் கூறினார்.
இதேவேளை இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அரசாங்கம் முக்கியச் சாலைகளை மூடியும், இணையத்தைத் தடுத்தும், காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளுக்கு ஊடகங்கள் செல்வதைத் தடை செய்தும் வருகிறது.




