AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சைபர் தாக்குதல்: வடகொரியாவின் புது வியூகம்
இராணுவக் கட்டமைப்புக்கள், இராஜதந்திர வட்டாரங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களைக் இலக்காகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடகொரிய ஹேக்கர்கள் தீவிர சைபர் தாக்குதல்களை முன்னெடுத்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்கொரியாவின் பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான ‘ஜெனியன்ஸ்’ (Genians) வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
வடகொரிய உளவுத்துறையுடன் தொடர்புடைய ‘கிம்சுகி’ (Kimsuky) எனும் சர்வதேச ஹேக்கிங் குழு, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் போலி ஆவணங்கள் மூலம் ‘ஸ்பியர்-ஃபிஷிங்’ (Spear-phishing) ரக கணினித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஆராய்ச்சி அறிக்கைகள், உத்தியோகபூர்வ அழைப்பிதழ்கள் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் போன்றே தோற்றமளிக்கும் ஆபத்தான கோப்புகளை (Malicious files) ஏஐ மூலம் நொடிப் பொழுதில் உருவாக்கி, அவற்றை இலக்கு வைக்கப்பட்ட நபர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி கணினிகளை ஊடுருவும் உத்தியை இவர்கள் கையாள்கின்றனர்.
பாதுகாப்பு முகமைகளிடம் சிக்காமல் இருப்பதற்காக, இணைய இணைப்பு இல்லாமலேயே இயங்கக்கூடிய ‘Ollama’, ‘GPT-4All’ போன்ற திறந்த மூல (Open-source) ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி இவர்கள் இத்தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு வல்லுநர்கள், ஏஐ தொழில்நுட்பமானது குறைந்த நேரத்தில் மிகத் துல்லியமான போலியான தரவுகளை உருவாக்கவல்லது என்பதால், இத்தகைய சமூகப் பொறியியல் (Social Engineering) தாக்குதல்கள் இனிவரும் காலங்களில் பாரியளவில் அதிகரிக்கக் கூடும் என எச்சரித்துள்ளனர்.
2 பில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி திருட்டு
வடகொரிய ஹேக்கர்கள் கடந்த 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டும் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான கிரிப்டோகரன்சிகளைக் கொள்ளையடித்துள்ளதாகப் பிளாக்செயின் பகுப்பாய்வு நிறுவனமான ‘எலிப்டிக்’ சுட்டிக்காட்டியுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது, ஹேக்கிங் செய்வதற்கான தொழில்நுட்பச் சவால்களை வெகுவாகக் குறைத்துள்ளதாகவும், கணினி அறிவு இல்லாதவர்கள் கூட ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி எளிதாகக் குற்றச்செயல்களில் ஈடுபடும் அபாயம் உருவாகியுள்ளதாகவும் சர்வதேச சைபர் குற்றவியல் ஆய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.




