ஆசியாவில் சிறந்த போர் நாடாக” மாறி வரும் ஜப்பான் – வடகொரியா கண்டனம்
ஜப்பான் ஒரு “போர் நாடாக” மாறி வருவதை வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் கண்டித்துள்ளார்.
அதேநேரம் பியோங்யாங்கின் இராணுவப் பாதுகாப்பை விரிவுபடுத்தவும் கிம் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜப்பான், தற்போதைய குழப்பமான சூழ்நிலைகளை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, தன்னை ஒரு இராணுவ சக்தியாக மாறுவதைத் தடுக்கும் அனைத்துத் தடைகளையும் அகற்றி போர் நாடாக உருவெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் சனே டகாயிச்சியின் ( Sanae Takaichi) கீழ், ஜப்பான் தனது சமாதானக் கொள்கையிலிருந்து விலகியுள்ளது.
அத்துடன் அவரது அமைச்சரவை ஏற்கனவே போர் விமானங்கள் உட்பட கொடிய ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கியுள்ளது.
இந்தக் கொள்கை மாற்றத்தை சீனா கண்டித்திருந்த நிலையில் தற்போது வடகொரியாவும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
ஜப்பானின் இந்த மாற்றத்தை உலக சமூகம் நிச்சயமாக எதிர்க்கும் என குவோ ஜியாகுன் (Guo Jiakun) தெரிவித்துள்ளார். இருப்பினும் ஜப்பான் அரசாங்கம் இந்த கொள்கை மாற்றங்களை நியாயப்படுத்தியுள்ளது.
டோக்கியோ இந்த மாற்றத்தை நியாயப்படுத்தியுள்ளது. தலைமை அமைச்சரவைச் செயலாளர் மினோரு கிஹாரா, “நமது நாட்டைச் சுற்றியுள்ள பாதுகாப்புச் சூழல் வேகமாக மாறிவரும் நிலையில், இந்தப் புதிய கொள்கையானது ஜப்பானுக்குப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, பிராந்தியத்திலும் சர்வதேச சமூகத்திலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மேலும் பங்களிக்கும்” என்று கூறியுள்ளார்.
ஜப்பானிய அரசாங்கம், “ஜப்பானுக்கு விரும்பத்தக்க ஒரு பாதுகாப்புச் சூழலை உருவாக்குவதற்கும், போரிடும் திறனை ஆதரிக்கக்கூடிய தொழில்துறை தளத்தைக் கட்டியெழுப்புவதற்கும், பாதுகாப்பு உபகரணப் பரிமாற்றங்களை உத்திப்பூர்வமாக ஊக்குவிக்க” விரும்புவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.




