இராணுவத்தை விரிவாக்க நைஜீரிய ஜனாதிபதி ஒப்புதல்
நைஜீரியாவில் இராணுவத்தை பலப்படுத்த அந்நாட்டு ஜனாதிபதி போலா தினுபு ( Bola Tinubu) நடவடிக்கை எடுத்துள்ளார்.
தொடர்ச்சியான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் இராணுவத்தை எட்டிலிருந்து 12 பிரிவுகளாக விரிவுபடுத்தவும், கூடுதலாக 28,000 வீரர்களைச் சேர்க்கவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதற்கமைய மகுர்தி (Makurdi), இலாரின் (Ilorin), ஜலிங்கோ (Jalingo) மற்றும் பெனின் சிட்டி (Benin City) ஆகிய இடங்களில் நான்கு புதிய இராணுவப் பிரிவுகளை அமைக்க அவர் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்தித் தொடர்பாளர் பயோ ஒனானுகா (Bayo Onanuga) கூறினார்.
அத்துடன் ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்காக, உபகரணங்கள், செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் படைவீரர் நலன் ஆகியவற்றில் முதலீட்டை அதிகரிக்கவும் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரிவாக்கப்பட்ட 12-பிரிவு அமைப்பானது, எட்டு நகரங்களில் உள்ள தலைமையகங்களைத் தக்க வைத்துக் கொள்ளும் எனவும் இது இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 5, 9 மற்றும் 10-வது பிரிவுகள் செப்டம்பர் மாதத்திலும், பெனின் நகரில் உள்ள 83-வது பிரிவு டிசம்பர் மாதத்திலும் செயல்பாட்டுக்கு வரும்.




