H-1B விசாவில் புதிய திருத்தம் – அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படும் தொழிலாளர்கள்
H-1B விசா வைத்திருக்கும் சில வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழக்கும்போது, புதிய வேலைகளைக் கண்டறிவதற்காக வழங்கப்படும் 60 நாள் கால அவகாசத்தை நீக்குவது தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
இந்த முன்மொழிவு தற்போது வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் வரவு செலவுத் திட்ட அலுவலகத்தால் (OMB) மதிப்பாய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் முன்மொழியப்பட்ட மாற்றங்களின் இறுதி விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்த புதிய முன்மொழிவு சட்டமானால், வேலையை இழக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும், அமெரிக்காவிற்குள் இருந்தபடியே மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவதற்கோ அல்லது தங்களது விசா வகையை மாற்றுவதற்கோ உள்ள வாய்ப்பை இழப்பார்கள், மேலும் அவர்கள் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்.
பரிசீலனையில் உள்ள இந்த முன்மொழிவானது அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குடிமக்களை இது மிகவும் பாதிக்கும்.
அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளின் (USCIS) தரவுகளின்படி, 2024-ல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து H-1B விசா விண்ணப்பங்களில் 71% இந்தியர்களிடமிருந்து வந்தவையாகும்.
மேலும், அமெரிக்க மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின்படி, தற்போது அமெரிக்காவில் 52 லட்சத்திற்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




