நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் உத்தரவு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ச, நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம இந்த விளக்கமறியல் உத்தரவை வழங்கினார்.
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டாரவின் சமர்ப்பணங்கள் மற்றும் சந்தேகநபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னரே நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்முதல் ஒப்பந்தத்தின் போது, 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை லஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டு நாமல் ராஜபக்சமீது முன்வைக்கப்பட்டது.
இந்த விமானக் கொள்முதல் தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ச லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முன்னிலையானார்.
சுமார் ஐந்து மணி நேர வாக்குமூலப் பதிவின் பின்னர், அதிகாரிகள் அவரைக் கைது செய்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.





