புலனாய்வுப் பிரிவு குறித்து பதறும் நாமல் எம்.பி.
“ நாட்டில் உளவுப் பிரிவு திட்டமிட்ட அடிப்படையில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. ” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“தமது இயலாமையை மூடிமறைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அடக்குமுறையை கையில் எடுத்துள்ளது. நாம் விசாரணை நடத்த வேண்டாம் எனக் கூறவில்லை. இந்த ஆட்சியில் நடந்த மோசடிகள் பற்றியும் விசாரணை அவசியம் என்றே கூறுகின்றோம்.
அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி கடனுக்கு வழங்கப்படுமாம். கடனை திருப்பி செலுத்தாவிட்டால் சோறு பானையை ஆட்சியாளர்கள் தூக்கிச்செல்லக்கூடும். 12 லட்சம் ரூபாவுக்கு கார் வழங்கப்படும் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர்.
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை இன்மையை ஏற்படுத்துவதற்கு முயற்சிஎடுக்கப்படுகின்றது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மக்களை பிரித்தாள முற்படுகின்றனர்.
புலனாய்வுத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு பலவீனப்படுத்தப்படுகின்றது.
மீனவர்களுக்கு எண்ணெய் நிவாரணம் வழங்கப்படவில்லை. விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அவர்களுக்கும் இன்னும் தீர்வு இல்லை”- என்றார் நாமல் ராஜபக்ச எம்.பி.




