மேற்காசிய போர் மற்றும் எல் நினோ தாக்கம்: இந்திய பொருளாதாரத்துக்கு ஆபத்து
2026 – 27 ஆம் நிதியாண்டில் இந்தியாவின்பொருளாதார வளர்ச்சி 6.80 சதவீதமாகக் குறையும் என ‘இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்’ (India Ratings and Research) நிறுவனம் கணித்துள்ளது.
மேற்காசியப் போர், உணவு மற்றும் எரிபொருள் பணவீக்கம், இந்திய ரூபாயின் மதிப்புச் சரிவு மற்றும் ‘எல் நினோ’வின் தாக்கம் காரணமாகவே இந்நிலை ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2025 – 26-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.60 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் அது 6.80 சதவீதமாகக் குறையும். எனினும், கடந்த மே மாதம் கணிக்கப்பட்ட 6.70 சதவீதத்தை விடத் தற்போதைய கணிப்பு சற்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் மதிப்பில் ஏற்படும் சரிவு மற்றும் எல் நினோ காரணமாக வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புள்ளதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைவது, வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைக் குறைத்துச் நாட்டின் பொருளாதாரத்திற்குச் சாதகமாக அமையும்.
ஆனால், எல் நினோ காரணமாக உணவுப் பணவீக்கம் அதிகரித்தால், குறைந்த எண்ணெய் விலையால் கிடைக்கும் பொருளாதாரச் சாதகம் குறையக்கூடும்.
நடப்பு நிதியாண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் சராசரி மதிப்பு 93.98 ரூபாயாக இருக்கும். முன்னதாக இது 94.28 ரூபாயாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. இது ஆண்டிற்கு 6.40 சதவீத ரூபாய் மதிப்புச் சரிவைக் குறிக்கிறது.
மேலும், கடந்த நிதியாண்டில் 2 சதவீதமாக இருந்த சில்லறைப் பணவீக்கம், நடப்பு நிதியாண்டில் சராசரியாக 4.90 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




