அமெரிக்க படையினர் மீது தாக்குதலா? ஆதாரம் கோருகிறது மெக்சிகோ
மெக்சிகோ எல்லையிலிருந்து அமெரிக்க பணியாளர்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துத் தகுந்த ஆதாரங்களை வழங்குமாறு அமெரிக்க அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளதாக மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் (Claudia Sheinbaum) தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ பகுதியிலிருந்து எல்லை கடந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான எந்தவொரு ஆதாரமும் தங்களின் தேசியக் காவல் படை, இராணுவம் அல்லது கடற்படையினருக்குக் கிடைக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.
மெக்சிகோவின் தமௌலிபாஸ் (Tamaulipas) மாநிலமும் அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலமும் சந்திக்கும் எல்லைப் பகுதியில், “அமெரிக்கக் கடலோரக் காவல் படையினரைக் குறிவைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது” என்று அமெரிக்க தூதுவர் ரொனால்ட் ஜான்சன் (Ronald Johnson) தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, எல்லைப் பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500 இராணுவ வீரர்கள், ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் எதிர்ப்புச் சாதனங்களுடன் கூடிய “ஆப்பரேஷன் மிரர்” (Operation Mirror) என்ற கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கையை மெக்சிகோ தொடங்கியுள்ளது.
அமெரிக்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை தீவிரப்படுத்தி வரும் போதிலும், மெக்சிகோ எல்லைக்குள் அமெரிக்க இராணுவத்தின் எந்தவொரு நேரடித் தலையீட்டையும் தான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று ஜனாதிபதி கிளாடியா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததற்கான எந்தவொரு தெளிவான சான்றுகளும் இதுவரை அமெரிக்கத் தரப்பிலிருந்து வழங்கப்படவில்லை என்ற போதிலும், எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்த இருநாட்டு முகமைகளும் இணைந்து கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.




