கோல் வேட்டை: 2ஆவது இடத்துக்கு முன்னேறிய பிரான்ஸ் வீரர்
FIFA உலகக்கிண்ண வரலாற்றில் அதிக கோல்களை அடித்தவர்கள் பட்டியலில் பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தனித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நியூயார்க் நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சுவீடன் அணியை வீழ்த்திய பிரான்ஸ் (3-0), காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு (Round of 16) தகுதி பெற்றது.
இந்த ஆட்டத்தில் இரண்டு கோல்களை அடித்ததன் மூலம், உலகக்கிண்ணத் தொடர்களில் எம்பாப்பேயின் மொத்த கோல்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இதன்மூலம் 16 கோல்களுடன் இருந்த மிரோஸ்லாவ் குளோஸை (Miroslav Klose) முந்தி, 19 கோல்களுடன் முதலிடத்தில் இருக்கும் லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) அடுத்தபடியாக அவர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
வரும் நாட்களில் இந்த இரு முன்னணி வீரர்களுக்கும் இடையேயான கோல் எண்ணிக்கையில் மேலும் மாற்றங்கள் ஏற்படுவது நிச்சயம் எனலாம்.
இவர்களுடன் பிராட்லி பார்கோலாவும் (Bradley Barcola) ஒரு கோல் அடிக்க, 2026 உலகக்கிண்ணத் தொடரில் பிரான்ஸ் அணி தனது தொடர் வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டது.
குழு அளவிலான போட்டிகளில் (Group-stage) பெற்ற அசுர பலத்துடன் களம் புகுந்த பிரான்ஸ் அணி, ஆட்டத்தின் முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
1998 மற்றும் 2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ண வெற்றியாளர்களான பிரான்ஸ், இடைவேளைக்கு முன்பாகவே 15 முறை எதிரணியின் இலக்கை நோக்கிப் பந்துகளை உதைத்துத் தாக்கியது.
இதில் எம்பாப்பே அடித்த ஒரு கோல் ‘ஆப்சைட்’ (Offside) என மறுக்கப்பட்டதுடன், மற்றொரு முயற்சி கோல் கம்பத்தில் பட்டுத் திரும்பியது.
இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய பின்னரும் சுவீடன் அணிக்கு எவ்வித நிம்மதியும் கிடைக்கவில்லை.
பிரான்ஸ் வீரர்கள் தொடர்ந்து சுவீடனின் கோல் பகுதியை முற்றுகையிட்டனர். ஒலிசே கொடுத்த பந்தைப் பயன்படுத்தி, பார்கோலா பெனால்டி பகுதிக்குள் இருந்து ஒரு நேர்த்தியான கோலை அடித்தார்.
அதன் பின்னர், ஜூல்ஸ் குண்டே மற்றும் ஒலிசே ஆகியோரின் தீவிரமான கோல் முயற்சிகளை சுவீடன் கோல்கீப்பர் ஜேக்கப் விடெல் செட்டர்ஸ்ட்ரோம் தடுத்து நிறுத்தினார்.
ஆட்டத்தின் 74ஆவது நிமிடத்தில், ஒலிசேயின் மற்றுமொரு சிறந்த உதவியுடன் எம்பாப்பே தனது இரண்டாவது கோலை அடித்தார். இதன் மூலம் 2026 உலகக்கிண்ணத் தொடரில் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.
பிரான்ஸ் அணியின் கேப்டனான எம்பாப்பே, ஜூலை 4ஆம் தேதி பிலடெல்பியா மைதானத்தில் பராகுவே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தனது கோல் எண்ணிக்கையை மேலும் உயர்த்த வாய்ப்புள்ளது.




