சர்ச்சைகளுக்கு மத்தியில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றம்
இந்தியா, தமிழகம் மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இன்று (28.11.2026) மாலை 5 மணியளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
கோயில் பட்டர்கள் மற்றும் நீதிபதிகள் இணைந்து தீபத்தை ஏற்றி வைத்தனர். உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் குழுவினர், மதுரை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதை மலையடிவாரத்திலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு பக்தி கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக, ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் தலைமையிலான குழுவினர் இன்று காலை திருப்பரங்குன்றம் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். பின்னர், தீபம் ஏற்றுவதற்கான பூஜைப் பொருட்களுக்கு சிறப்புப் பூஜை செய்து அவற்றை எடுத்துக்கொண்டு மலைக்குச் சென்றனர்.
தீபமேற்றும் நிகழ்வின்போது பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைக் கருத்திற்கொண்டு, அனுமதிக்கப்பட்ட குழுவினரைத் தவிர ஏனைய பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் மலை ஏற அனுமதி வழங்கப்படவில்லை.
முன்னதாக, நவம்பர் 24ஆம் திகதி தீபம் ஏற்றப்படாதமை தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தது. மேலும், மலைப் பாதுகாப்புப் பணியிலிருந்து தமிழக பொலிஸார் விலகி, அந்தப் பொறுப்பை மத்திய ரிசர்வ் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டிருந்தது.




