இலங்கையில் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள ‘சட்டமூலம்’ இன்று அமைச்சரவையில்
இலங்கையிலுள்ள எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதை இரண்டு ஆண்டுகள் நீடிப்பதற்கான முன்மொழிவு, இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தை, அவர் முதலில் நியமிக்கப்பட்ட போது இருந்த வயதைப் பொருட்படுத்தாமல், நான்கு ஆண்டுகள் கொண்ட ஒற்றைப் பதவிக்காலத்திற்கு வரையறுப்பதற்கான ஒரு முன்மொழிவும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ள யோசனையில் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், நீதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சட்டமூலமே இலங்கை அரசியலில் தற்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிரணிகள் அண்மையில் ஒன்றிணைந்து இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
அரசியலமைப்பின் 107(5) பிரிவின்படி, உயர்நீதிமன்ற நீதியரசரின் தற்போதைய ஓய்வு வயது 65 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய முன்மொழிவின்படி, இது 67 ஆண்டுகளாக நீடிக்கப்படும்.
அதே பிரிவின் கீழ், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வு வயது 63 ஆண்டுகளில் இருந்து, 65 ஆண்டுகளாக நீடிக்கப்படும்.
எதிர்க்கட்சிகள், சட்டத்துறை சார் அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற போதும், அரசாங்கம் நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் திட்டத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




