இலங்கையை கண்ணிவெடி அற்ற நாடாக மாற்ற ஜப்பான் நிதியுதவி
இலங்கையின் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனிதநேயக் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்குத் தனது ஆதரவை மேலும் விரிவாக்கும் வகையில் ஜப்பான் அரசாங்கம் 148 மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கி ஒப்பந்தம் செய்துள்ளது.
இலங்கைக்கான ஜப்பானியத் தூதரகம் மற்றும் கண்ணிவெடி அகற்றும் அமைப்புகளுக்கு இடையே இதற்கான உத்தியோகபூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜப்பான் அரசாங்கத்தின் ‘Grant Assistance for Grassroots Human Security Projects’ (GGP) திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் எஞ்சியுள்ள கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்களை அப்புறப்படுத்தும் பணிகளுக்கு இந்நிதி பயன்படுத்தப்படும்.
இடம்பெயர்ந்த மக்களின் பாதுகாப்பான மீள்குடியேற்றத்தை உறுதி செய்வதோடு, அப்பகுதிகளில் விவசாயம் மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகளைப் பாதுகாப்பான முறையில் மீண்டும் தொடங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
2002-ஆம் ஆண்டிலிருந்து இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்கு ஜப்பான் தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருகிறது.
இலங்கையை ‘கண்ணிவெடிகள் அற்ற நாடாக’ மாற்றுவதற்கான தேசிய இலக்கிற்கு ஜப்பானின் பங்களிப்பு பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது.




