இலங்கை செய்தி

யாழ். தீவக மனிதப் புதைகுழி: நிதி ஒதுக்கீடு செய்யத் தயார் என OMP அறிவிப்பு

யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தின் தீவகப் பகுதியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

35 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வடக்கிலுள்ள ஐந்து இடங்களில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டு நியாயமான விசாரணை நடத்துமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தாக்கல் செய்த வழக்கு, நேற்றைய தினம் (ஜூலை 28) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஊர்காவற்றுறை, அராலிச் சந்தி, மண்கும்பான் பிள்ளையார் ஆலயம் அருகில், அல்லைப்பிட்டி மற்றும் மண்டைத்தீவு ஆகிய ஐந்து இடங்களில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டு நியாயமான விசாரணை நடத்துமாறு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 2025 ஓகஸ்ட் மாதத்தில் ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஊர்காவற்றுறை பொலிஸார் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு, நீதவான் அனிபா ரஜீவ் முன்னிலையில் நேற்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்ததும் அகழ்வாய்வுப் பணிகளுக்குத் தேவையான நிதியை ஒதுக்க முடியும் என காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பூர்ணிமா மரியநாயகம் நீதிமன்றத்தில் அறிவித்ததாக, இந்த முறைப்பாட்டை முன்வைப்பதில் முக்கிய பங்காற்றிய வேலணை பிரதேச சபையின் சுயேச்சை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன், நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

“முறைப்பாட்டாளர்கள் குறிப்பிடப்படும் இடங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அந்த இடத்தின் காணியின் வரலாற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேலும், குருக்கள்மடம், செம்மணியில் நடைபெற்றதைப் போன்ற நிர்வாகக் குழு கூட்டமொன்றை நடத்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது.

அதில் பிரதேச செயலகம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், பிரதேச சபை மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் பங்கேற்க வேண்டும் எனவும், சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை கிடைத்த பின்னர், செலவீனங்களுக்குத் தேவையான பாதீட்டை ஒதுக்க முடியும் என்றும் கூறியிருந்தார்.”

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக சான்றுகள் தொடர்பான அறிக்கையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக எமது பிராந்திய ஊடகவியலாளர் தெரிவிக்கின்றார்.

இந்த வழக்கு மீண்டும் செப்டெம்பர் 22ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மண்டைத்தீவு தோட்டக் காணியில் உள்ள ஒரு கிணற்றில் மாத்திரம் சுமார் 60 பேரின் சடலங்கள் இருப்பதாக வேலணை பிரதேச சபையின் சுயேச்சை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் 2025 ஓகஸ்ட் 20ஆம் திகதி குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கிணற்றில் சடலங்கள் வீசப்பட்டதை நேரில் கண்ட சாட்சியாளர் ஒருவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்திருந்தார்.

35 ஆண்டுகளுக்கு முன்பு அரசப் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையையும் நினைவுகூர்ந்த அவர், அன்றைய தினம் படையினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு சென்றவர்களில் 84 பேருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை எனவும் வலியுறுத்தினார்.

படையினரால் கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் கொலை செய்யப்பட்டு கிணறுகளில் வீசப்பட்டதாகவும் சுவாமிநாதன் பிரகலாதன் அப்போது தெரிவித்திருந்தார்.

மண்டைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட 84 பேருக்கு நீதி வழங்குமாறு கோரி, தனது மகனும் அவர்களில் ஒருவரெனக் குறிப்பிட்டு, மண்டைத்தீவு மூன்றாம் வட்டாரத்தைச் சேர்ந்த சுசைதாஸ் ஜேசுரத்னம் தர்மராணி 2025 ஏப்ரல் 30ஆம் திகதி ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்ததாக பிராந்திய ஊடகவியலாளர் தெரிவித்தார்.

சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு, இலங்கையில் இதுவரை 17 மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முதன்முறையாக வெளிப்படுத்தியிருந்தார். எனினும், இலங்கையின் பல பகுதிகளில் இதுபோன்ற மனிதப் புதைகுழிகள் இன்னும் ஏராளமாக இருக்கக்கூடுமென மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை