லெபனானின் தெற்று நகரில் இருந்து வெளியேறும் இஸ்ரேலியப் படைகள்
இஸ்ரேலியப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, லெபனான் இராணுவப் படைகள் தெற்கு நகரில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அப்பகுதியிலிருந்து இஸ்ரேலியப் படைகள் விலகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தெற்கில் உள்ள ஸவ்தார் அல்-கர்பியே நகரில் தங்கள் வீரர்கள் நிலைநிறுத்தப்படத் தொடங்கியுள்ளதாக லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், “பாதுகாப்பு நிலைமை சீராகும் வரை பொதுமக்கள் நகரத்திற்குச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் சொந்தப் பாதுகாப்பிற்காக அங்கு பணியில் உள்ள இராணுவப் பிரிவுகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் இராணுவத் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த விடயம் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட ஒப்பந்தத்தைச் சோதனை அடிப்படையில் செயல்படுத்த உள்ள மூன்று தெற்குப் பகுதிகளில் ஜவ்தார் அல்-கர்பியேவும் ஒன்றாகும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்திருந்தது.
இந்த ஒப்பந்தத்தின்படி, தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் ஆக்கிரமித்துள்ள இடங்களிலிருந்து படிப்படியாகப் படைகளைத் திரும்பப் பெறும்.
அதன் பிறகு, லெபனான் இராணுவம் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பொறுப்பேற்று, ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களைக் களைவதையும் மேற்பார்வையிடும்.
சில உள்ளூர்வாசிகள், அந்த கிராமங்கள் இஸ்ரேலியப் படைகளால் ஒருபோதும் ஆக்கிரமிக்கப்படவில்லை என்று கூறி, அத்திட்டத்தில் அவை சேர்க்கப்பட்டதைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளனர்.





