சுரேஷ் சலே password வழங்கினால் உளவுத்துறைக்கு ஆபத்தா?
சுரேஷ் சலேவின் மடிக்கணினி மற்றும் தொலைபேசி என்பவற்றின் கடவுச் சொற்களை (பாஸ்வேட்) தற்போதைய சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசகரவுக்கு வழங்கவேக்கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவுபெற்று, சுயாதீன ஆணைக்குழுவின் முன்னிலையிலேயே அவரது தகவல்கள் இரகசியமாக பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“சலேயின் மடிக்கணினி, தொலைபேசி என்பவற்றின் கடவுச் சொற்களை வழங்க மறுக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது. அவர் மேற்படி பாஸ்வேடை வழங்க வேண்டும் என உறுப்பினர் ஒருவர் ஊடக சந்திப்பில் வலியுறுத்துவதை கேட்க முடிகின்றது.
தேசிய பாதுகாப்பு மற்றும் உளவு தகவல் தொடர்பில் துளியளவும் தெளிவில்லாதவர்களே இப்படியான கருத்தை வெளியிடுகின்றனர்.
நீதிமன்ற உத்தரவு இருந்தால் மட்டுமே அதனை வழங்க வேண்டும்.
ஆனால் தற்போதைய சிஐடி பணிப்பாளர் ஷானி அபேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரதன் ஆகியோருக்கு வழங்கக்கூடாது. தாக்குதலை தடுக்க தவறினர் என இவர்கள்மீது குற்றச்சாட்டு உள்ளது.
சுரேல் சலேவிடம் முக்கியமான உளவு தகவல்கள் இருந்திருக்கலாம். அது எதிர்காலம் தொடர்பானதாகக்கூட இருக்கலாம்.
எனவே, நீதிமன்ற உத்தரவுடன் சுயாதீன ஆணைக்குழு முன்னிலையிலேயே ஆய்வு இடம்பெற வேண்டும். தேவையான தகவல்களை பெற்றுவிட்டு, ஏனைய தகவல்களை அந்த ஆணைக்குழுவால் அழிக்க முடியும்.” – என்றார்.




