ஈரான்மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தினாலும் பதற்றம் தணியவில்லை
அமெரிக்காவின் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போதிலும், செங்கடல் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள சவுதி அரேபியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதேவேளை, காஸ்பியன் கடலில் உள்ள தனது வணிகக் கப்பல் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதனால், வார இறுதியில் ஈரான் போர் மேலும் விரிவடைந்துள்ளது.
ஈரானுக்கு எதிரான தனது கடற்படை முற்றுகை முழுமையாக அமலில் உள்ளதாக சனிக்கிழமை தெரிவித்த அமெரிக்க இராணுவம், தொடர்ந்து 13 இரவுகள் நடத்திய தீவிரத் தாக்குதல்களை ஏன் திடீரென நிறுத்தியது என்பது குறித்த விளக்கத்தை அளிக்கவில்லை.
அதேபோன்று, அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக அண்டை நாடுகள் மீது ஈரான் தினமும் நடத்தி வந்த தாக்குதல்கள் எதுவும் இந்த வார இறுதியில் பதிவாகவில்லை.
இந்தத் தாக்குதல் நிறுத்தம் குறித்துக் கேட்கப்பட்டபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “அதிபர் ட்ரம்ப் எப்போதுமே இராஜதந்திர பேச்சுவார்த்தைகளையே விரும்புகிறார்.
எனினும், ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரத் தவறினால் என்ன நேரும் என்பதை அவர் அவர்களுக்கு உணர்த்தியுள்ளார்,” என்று கூறினார்.
ஈரான் மீதான தாக்குதல்களை விரிவுபடுத்தும் திட்டத்தில் இருந்து அதிபர் ட்ரம்ப் தற்போதைக்கு பின்வாங்கியுள்ளதாக, இந்த விவாதம் குறித்து அறிந்த இருவரை மேற்கோள் காட்டி ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.




