சிங்கள பௌத்த மக்களுக்கு அநீதி: வடக்கில் மாவீரர் தினம்: தேரர் கொந்தளிப்பு
சிங்கள, பௌத்த மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆனால் வடக்கில் ஈழக்கொடி ஏற்றப்படுவதற்கும், மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுவதற்கும் அனுமதி வழங்கப்படுகின்றது என சிங்கள ராவய அமைப்பின் முக்கியஸ்தரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அக்மீமன தயாரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அநுராதபுரத்தில் பிக்குகள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது, குண்டர் குழுக்கள் களமிறக்கப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்கள் மிகவும் அநீதியான முறையில் நடத்தப்பட்டபோதிலும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சிங்கள, பௌத்த மக்கள் இவ்வாறே நடத்தப்படுகின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஆனால், யாழ்ப்பாணத்தில் ஈழக்கொடி ஏற்றப்படுகின்றது, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது, பிரபாகரனின் பிறந்தநாளும் கொண்டாடப்படுகின்றது எனக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான செயற்பாடுகளுக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்படுகின்றது எனக் கேள்வி எழுப்பினார்.
ஜேர்மனியில் நாசிசம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ஹிட்லர் தொடர்பான புத்தகத்தைக்கூட வைத்திருக்க முடியாத வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாகவே தற்போதைய அரசாங்கம் சிங்கள, பௌத்தர்களுக்கு எதிரானது எனத் தாம் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், திஸ்ஸ விகாரையில் பூஜைகள் நடைபெறும்போது அதற்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், சிங்கள மக்கள் உறங்கிக்கொண்டிருக்கும் சிங்கம் போன்றவர்கள் என்றும், அந்தச் சிங்கம் விழித்துக்கொண்டால் மீண்டும் அமைதிப்படுத்துவது கடினமாகிவிடும் என்றும் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்தார்.




