இந்தோ,பசிபிக் பாதுகாப்பு: பிரதமர் மோடி வழங்கியுள்ள உறுதிமொழி!
இந்தோ, பசிபிக் பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி என்பவற்றில் இந்தியாவும் வியட்நாமும் ஒருங்கிணைந்து பாடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக சென்றிருந்த வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் மற்றும் பிரதமர் மோடி இடையிலான சந்திப்பு டெல்லியில் நேற்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலுக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறை உறவுகளைப் பெருமளவில் விரிவுபடுத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ ஆதிக்கம் மற்றும் அத்துமீறல்கள் குறித்து இரு நாட்டுத் தலைவர்கள் தலைமையிலான குழுக்கள் விரிவாக விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – வியட்நாம் இடையே பொருளாதார ஒத்துழைப்பு, ராணுவத் தளவாட உற்பத்தி மற்றும் தொழில்நுட்பப் பகிர்வு ஆகிய துறைகளில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இது ஆசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.





