IAS அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி: TVK எம்.எல்.ஏயின் அரசியல் வாழ்வுக்கு ஆப்பு
தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால், அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் அபாயம் உள்ளதுடன், ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் ஏற்படலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு, அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் கடந்த சில வாரங்களாகச் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனை வதந்தி எனக் குறிப்பிட்ட தவெக தரப்பினர், முறைப்பாடு கிடைத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், அதிமுக வழக்கறிஞர் திரிசூலி தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மாவட்ட ஆட்சியர் பத்மஜா அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தனிப்பிரிவு காவல்துறையினர் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷின் இல்லத்துக்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையில், அவரது வீட்டின் முன்பாகத் தொண்டர்கள் குவிந்ததால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது வீடு பூட்டப்பட்டது.
மேலும், இந்த வழக்குத் தொடர்பாக அருள் விக்னேஷுக்குக் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவரது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் வாய்ப்புள்ளது.
மேலும், குற்றத்தின் தன்மை மற்றும் விதிக்கப்படும் தண்டனையைப் பொறுத்து, ஆறு ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிடத் தகுதியிழக்கும் நிலையும் ஏற்படலாம்.




