காலனித்துவ ஆட்சியின்போது கைப்பற்றப்பட்ட நாகா இனத்தவர்களின் எச்சங்கள் ஒப்படைப்பு
பிரித்தானியர்களின் காலனித்துவ ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 39 பேரின் எச்சங்களை, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகம் நேற்று நாகா சமூகத்தினரிடம் ஒப்படைத்துள்ளது.
மியான்மருடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தைச் சேர்ந்த சுமார் 30 பேர், இந்நிகழ்விற்காக பிரித்தானியாவிற்கு பயணம் செய்திருந்தனர்.
பிட் ரிவர்ஸ் அருங்காட்சியகத்தில் (Pitt Rivers Museum) நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏராளமானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன் இரு தரப்பினரும் இந்த ஒப்படைப்பு குறித்த முறையான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது, உரையாற்றிய அருங்காட்சியகத்தின் இயக்குனர் வான் ப்ரோக்ஹோவன், இது “எதிர்கால சந்ததியினருக்குச் சொல்லப்படும் கதைகளில் இடம்பெறப்போகும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்” என்று குறிப்பிட்டார்.
மேலும் இந்த ஆக்ஸ்போர்டு அருங்காட்சியகத்தில் நாகா கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் 6,000-க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன – இதுவே உலகின் மிகப்பெரிய நாகா கலாச்சாரத் தொகுப்பாகும்.
தற்போது, நாகா மக்களின் “முன்னோர்களின் மனித எச்சங்களை” (முக்கியமாக மண்டை ஓடுகள்) அந்த மக்களிடமே அருங்காட்சியகம் திருப்பி அளிக்கிறது.
19-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இனவரைவியல் அருங்காட்சியகமான பிட் ரிவர்ஸ், ஏற்கனவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த பழங்குடியின சமூகங்களிடம் மனித எச்சங்களை ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




