இலங்கையில் பயணிகள் ட்ரோன் சேவை: சீனா மகிழ்ச்சி
கொழும்பு துறைமுக நகரில் சீனா உருவாக்கிய தானியங்கி பயணிகள் விமானத்தின் (ட்ரோன்) வெற்றிகரமான செயல்விளக்கப் பறப்பு குறித்து கொழும்பில் உள்ள சீனத் தூதரகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் இலங்கையின் சுற்றுலா, இணைப்பு மற்றும் நகரப் போக்குவரத்திற்கு ஒரு சாத்தியமான புதிய வழியாக அமையும் என்றும் அது கூறியுள்ளது.
எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், EH216-S தானியங்கி வான்வழி வாகனம் துறைமுக நகரில் ஒரு வெற்றிகரமான செயல்விளக்கப் பறப்பை நிறைவு செய்துள்ளதாகவும், இந்த வளர்ச்சியானது பசுமையான மற்றும் அறிவார்ந்த குறைந்த உயரப் போக்குவரத்தை நனவாக்குவதற்கான ஒரு படி என்றும் சீனத் தூதரகம் விவரித்துள்ளது.
“கனவிலிருந்து நனவாக்கம் வரை, பசுமையான மற்றும் அறிவார்ந்த குறைந்த உயரப் போக்குவரத்து, சிறிலங்காவின் சுற்றுலா, இணைப்பு மற்றும் நவீன நகரப் போக்குவரத்திற்கு அற்புதமான புதிய சாத்தியக்கூறுகளைத் திறக்கிறது.
விமான நிலையத்திற்கு நேரடியாகப் பறப்பது நீங்கள் நினைப்பதை விட அருகில் இருக்கலாம்!” என்று அது கூறியுள்ளது.




