வேல்ஸ் அரசியல் முடிவுகள் – கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தயாராகும் பசுமைக் கட்சி
அடுத்த வேல்ஸ் அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்படும் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருப்பதாக வேல்ஸ் பசுமைக் கட்சித் தலைவர் அந்தோனி ஸ்லாட்டர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிளைட் கம்ருவின் துணைத் தலைவர், தேர்தலில் அதிக இடங்களை பெற்றிருந்தாலும் முழுமையான பெரும்பான்மையைப் பெறத் தவறிய தங்கள் கட்சி, செனட்டில் பொதுவான கொள்கைகள் கொண்ட மற்ற முற்போக்குக் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது குறித்து பரிசீலிக்கும் என தெரிவித்திருந்தார்.
இதனிடையே, சீர்திருத்தக் கட்சி வெற்றி பெறாததை வரவேற்ற அந்தோனி ஸ்லாட்டர், 96 இடங்களில் 34 இடங்களை பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்ற அந்தக் கட்சியின் தோல்வி, பிளவுபடுத்தும் ட்ரம்ப் பாணி அரசியலை வேல்ஸிலிருந்து விலக்கி வைக்க விரும்பிய அனைவருக்கும் கிடைத்த வெற்றி எனக் குறிப்பிட்டார்.
மேலும், “அடுத்த அரசாங்கம் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். ஆனால் இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச் செலவு நெருக்கடியை சமாளித்தல், தேசிய சுகாதார சேவையை பாதுகாத்தல், வாடகை நெருக்கடியை சரிசெய்தல் மற்றும் இயற்கைச் சூழலை மீட்டெடுத்தல் போன்ற பசுமைக் கட்சியின் முக்கிய நோக்கங்களை எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் முன்னிறுத்துவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.





