நோர்வே மன்னரின் இறுதிச் சடங்கு இன்று
நோர்வேயின் மன்னர் ஹரால்ட் V, தனது 89-வது வயதில் காலமானதைத் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்ட 13 நாள் தேசிய துக்க நிகழ்வுகள் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றன.
இந்நிலையில் இன்றைய இறுதி நிகழ்வில், அரச மாளிகையிலிருந்து ஓஸ்லோ கதீட்ரல் (Oslo Cathedral) வரை நடைபவணி இடம்பெறவுள்ளது.
உள்ளூர் நேரப்படி மதியம் 12:00 மணிக்கு இந்த நடைபவணி ஆரம்பிக்கப்படுவதுடன், மதியம் 1.00 மணியளவில், தேவாலயத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும்.
இந்நிகழ்வு நாடு தழுவிய ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் தொடங்கும்.
பிரிட்டனின் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி ஆன்; ஜப்பானின் பட்டத்து இளவரசர் அகிஷினோ மற்றும் பட்டத்து இளவரசி கிகோ, ஸ்பெயினின் மன்னர் ஃபெலிப், ராணி லெடிசியா மற்றும் ராணி சோபியா; ஸ்வீடனின் அரச குடும்பத்தினர்; மற்றும் டென்மார்க்கின் மன்னர் ஃப்ரெட்ரிக் மற்றும் ராணி மேரி ஆகியோர் இதில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் உலகெங்கிலும் உள்ள தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




