இந்தியா செய்தி

இந்தியாவில் 5 ஒராங்குட்டான் குட்டிகள் மீட்பு:விசாரணை தீவிரம்

இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில், தங்களின் இயற்கை வாழ்விடத்திலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியொன்றில் இருந்து 5 குட்டி ஒராங்குட்டான்கள் (Orangutans) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் கிழக்கு மாநிலமான ஒடிசாவில், தங்களின் இயற்கை வாழ்விடத்திலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியொன்றில் இருந்து 5 குட்டி ஒராங்குட்டான்கள் (Orangutans) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு தொலைவிலுள்ள காட்டுப் பகுதிக்கு இவை எவ்வாறு வந்தடைந்தன என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கண்டுபிடிக்கப்பட்ட குட்டி ஒராங்குட்டான்கள் தங்களுக்குரிய வெப்பமண்டல மழைக்காடுகளிலிருந்து விலகி, காட்டுப் பகுதியில் ஒன்றாக அமர்ந்து வாழைப்பழங்களை உட்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஒராங்குட்டான்கள் இந்தியாவை தாயகமாகக் கொண்ட விலங்குகள் அல்ல. அழிந்துவரும் அபாயத்திலுள்ள இப் பாலூட்டிகள் இந்தோனேசியா மற்றும் மலேசியாவின் வனப்பகுதிகளில் மட்டுமே இயற்கையாக வாழ்கின்றன.

சர்வதேச கடத்தல் கும்பல் ஒன்றினால் இவை நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டு, நெடுஞ்சாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருக்கலாமா என்பது குறித்து விசாரணை அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக ஒடிசாவின் வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் பாலசோர் (Balasore) மாவட்டத்தில் உள்ளூர் மக்கள் சிலர் இந்த விலங்குகளைக் கண்டு வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை இவை மீட்கப்பட்டன.

காயமடைந்த குட்டிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், அவை மாநிலத் தலைநகரான புவனேஸ்வரில் உள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்காவிற்கு (Nandankanan Zoological Park) கொண்டு செல்லப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து பாலசோர் மாவட்ட வன அதிகாரி பிரதீக் பிரகாஷ் இந்தால்கர் பிபிசிக்கு தெரிவிக்கையில், “இந்த விலங்குகள் இயற்கையாக ஒடிசாவிற்கு வந்திருக்க முடியாது; சாலை வழியாகவே இங்கு கொண்டுவரப்பட்டிருக்க வேண்டும்.

மேற்கு வங்க எல்லைக்கு அருகில் உள்ள போகராய் பிரிவில் அமைந்த ரணகடா எனும் முன்மொழியப்பட்ட காப்பகக் காட்டிலேயே இவை கண்டெடுக்கப்பட்டன. இப்பகுதி சவுக்கு மரங்களால் சூழப்பட்ட அடர்த்தி குறைந்த காடாகும். இது மாநில நெடுஞ்சாலைக்கு மிக அருகில் உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு இந்திய வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டுப் பணியகத்திற்கு (Wildlife Crime Control Bureau) ஒடிசா அரசு கோரிக்கை விடுத்துள்ளது. பொலிஸார், வனத்துறை அதிகாரிகள் மற்றும் சிறப்புப் பணிக்குழுவினர் அடங்கிய குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஒராங்குட்டான்கள் அப்பகுதியில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே இருந்திருக்கக் கூடும் என வனத்துறையினர் நம்புகின்றனர். வனப்பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் வேறு எந்த ஒராங்குட்டான்களோ அல்லது அவை எவ்வாறு அங்கு வந்தன என்பதற்கான சான்றுகளோ கிடைக்கவில்லை என அதிகாரி இந்தால்கர் தெரிவித்தார்.

இவை மிகவும் சிறிய குட்டிகள் என அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ள போதிலும், அவை 1 முதல் 2 வயதிற்குட்பட்டவை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிகவும் சிறிய வயதைக் கொண்ட இக்குட்டிகள் தனியாக மீட்கப்பட்டுள்ளது பெரும் கவலையளிப்பதாக வனவிலங்கு நிபுணர் பிஸ்வஜித் மொஹந்தி கவலை வெளியிட்டுள்ளார்.

பொதுவாகக் குட்டி ஒராங்குட்டான்கள் சுதந்திரமாக வாழ்வதற்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ளும் வரை, பல ஆண்டுகள் தாய் விலங்குடனேயே வாழ்கின்றன. மேலும், பெண் ஒராங்குட்டான்கள் எட்டு வருடங்களுக்கு ஒருமுறையே குட்டிகளை ஈனுகின்றன.

எனவே, தாய் விலங்கு எதுவும் இன்றி தங்களின் இயற்கை வாழிடத்திலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் 5 குட்டிகள் ஒன்றாகக் மீட்கப்பட்டுள்ளமை பெரும் சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

போர்னியன் (Bornean), சுமாத்திரன் (Sumatran) மற்றும் தபானுலி (Tapanuli) என தற்போது மூன்று வகை ஒராங்குட்டான் இனங்கள் வாழ்கின்றன.

இவை அனைத்தும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தினால் (IUCN) மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

காடழிப்பு, வாழிட இழப்பு மற்றும் வேட்டையாடுதல் காரணமாக இவற்றின் எண்ணிக்கை பல ஆண்டுகளாகப் வெகுவாகக் குறைந்து வருகின்றது.

அழிந்துவரும் வனவிலங்கு வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் CITES சர்வதேச ஒப்பந்தத்தின் கீழ் ஒராங்குட்டான்களை வணிக ரீதியாக விற்பனை செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வனவிலங்கு சட்டங்களின் கீழும் இவை பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாகும்.

இருப்பினும், அரியவகை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதற்கும் தனிநபர் சேகரிப்புகளுக்காகவும் ஒராங்குட்டான்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் குட்டி ஒராங்குட்டான்கள் கண்டெடுக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 2022 ஆம் ஆண்டில், அசாம் – மிசோரம் மாநில எல்லைக்கு அருகிலுள்ள சோதனைச் சாவடி ஒன்றில் இரண்டு குட்டி ஒராங்குட்டான்கள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன.

அவை அண்டை நாடான மியான்மர் வழியாக இந்தியாவிற்குள் கடத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் அப்போது சந்தேகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி