பிரான்ஸ் ரயில் விபத்து – நாடோடிகள் முகாமில் இருந்து மூவர் கைது
பிரான்ஸில் கடந்த செப்டம்பர் மாதம் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பிரெஞ்சு காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நாடோடிகள் முகாமில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
186 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த ரயில், வடமேற்கு பிரான்சின் நார்மண்டியில் உள்ள ரூவன் மற்றும் கேன் நகரங்களுக்கு இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இதில் 44 பேர் காயமடைந்திருந்தனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளில் ரயில் தண்டவாளத்தில் சந்தேகத்திற்குரிய பொருள் ஒன்று மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய 45 வயதான தந்தை மற்றும் அவரது இரண்டு புதல்வர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
திருட்டு முயற்சி, குழுவாகத் திருட்டு மற்றும் தற்செயலாக உடல் காயம் ஏற்படுத்துதல் ஆகிய சந்தேகத்தின் பேரில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.




