இந்தியா உலகம் செய்தி

இந்தியாவில் இருந்து திரும்பினால் சிறை உறுதி: ஷேக் ஹசீனாவுக்கு பங்களாதேஷ் கடும் எச்சரிக்கை

இந்தியாவிலிருந்து பங்களாதேஷுக்கு திரும்பினால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என பங்களாதேஷ் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து பங்களாதேஷுக்கு திரும்பினால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என பங்களாதேஷ் அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

டிசம்பர் மாதம் நாடு திரும்புவதற்கு ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள், பங்களாதேஷில் அரசியல் பதற்றத்தையும் வீதிப் போராட்டங்களையும் மீண்டும் அதிகரித்துள்ளன.

2024ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் வசித்து வருகின்றார். அவரை நாடு திரும்பச் செய்வதற்குப் பதிலாக, இந்தியாவிலிருந்து நாடு கடத்தி தம்மிடம் ஒப்படைக்குமாறு பங்களாதேஷ் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவுடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்கும் என எதிர்பார்ப்பதாக பங்களாதேஷின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஷமா ஒபேட் இஸ்லாம் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்தக் கோரிக்கை தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. எனினும், கடந்த ஏப்ரல் மாதம் பங்களாதேஷின் நாடு கடத்தல் கோரிக்கையை பரிசீலித்து வருவதாக இந்தியா தெரிவித்திருந்தது.

ஷேக் ஹசீனாவுக்கு பங்களாதேஷில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், 2024ஆம் ஆண்டு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து அவரது அவாமி லீக் கட்சியும் தடை செய்யப்பட்டுள்ளது.

அந்த மக்கள் எழுச்சியின்போது 1,400 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

2024 ஆகஸ்ட் மாதம், பதவி விலகக் கோரி போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், ஷேக் ஹசீனா டாக்காவிலிருந்து வெளியேறி இந்தியாவுக்குச் சென்றார்.

இதனையடுத்து, டிசம்பர் மாதம் பங்களாதேஷுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு, புதிய கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டை கோரி விண்ணப்பித்திருந்தார். எனினும், அந்தக் கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

“அவர் பங்களாதேஷுக்குள் நுழைய முயன்றவுடன் கைது செய்யப்படுவார். சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சட்டம் தனது கடமையைச் செய்யும்” என ஷமா ஒபேட் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தியா நாடு கடத்தல் ஒப்பந்தத்தை மதித்து, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள அவரை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர் சட்டத்தின் முன் நிற்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த விவகாரம் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கிப் போராடத் தூண்டியுள்ளது. ஹசீனா நாடு திரும்புவதற்கு ஆதரவாக இம்மாதம் ஒரு வார கால போராட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதாக அக்கட்சி அறிவித்திருந்தது. இதன் இறுதியாக நவம்பர் 19ஆம் திகதி நாடளாவிய முடக்கப் போராட்டமும் இடம்பெற்றது.

கடந்த 10 நாட்களில் குறைந்தது 28 மாவட்டங்களில் வாகனங்கள் மீது தீவைப்பு சம்பவங்கள் மற்றும் பல குண்டுவெடிப்புகள் பதிவாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவங்களில் பல பொலிஸ் அதிகாரிகளும் பொதுமக்களும் காயமடைந்துள்ளனர்.

இந்த வன்முறைகளை ஹசீனாவின் “அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையில் உள்ள கட்சியின் உயிர்வாழும் முயற்சி” என ஷமா ஒபேட் இஸ்லாம் விமர்சித்துள்ளார்.

எனினும், தற்போதைய அரசியல் தலைமையே வன்முறைகளுக்குப் பொறுப்பானது என அவாமி லீக்கின் சிரேஷ்ட உறுப்பினர் காலித் மஹ்மூத் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடன் ஷேக் ஹசீனாவை அழைத்து வருவதற்காக விமானம் அனுப்புவது தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா–பங்களாதேஷ் உறவு குறித்து கருத்து தெரிவித்த அவர், பங்களாதேஷின் கௌரவம், சுயமரியாதை மற்றும் தேசிய நலன்களைப் பாதிக்காத வகையில் இந்தியாவுடன் சமநிலையான உறவைப் பேண விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

“பங்களாதேஷுடன் எத்தகைய வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்பதை இந்தியா தீர்மானிக்க வேண்டும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி