தம்பதியினரை சுற்றிவளைத்து துன்புறுத்தியோருக்கு வலை
பீகார் மாநிலம் கயாவில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை, கும்பல் ஒன்று சுற்றி வளைத்துத் துன்புறுத்தி, கெட்ட வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்திய அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கயா பகுதியில் மோட்டார் சைக்கிளில் தம்பதி சென்று கொண்டிருந்தபோது, அவர்களை இடைமறித்த இளைஞர்கள் அடங்கிய கும்பல் ஒன்று தம்பதியைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அவர்களைச் சூழ்ந்துகொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளது.
இச்சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பொதுமக்களிடையேயும் இணையத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
வைரல் வீடியோவின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள கயா காவல்துறையினர், தம்பதியைத் துன்புறுத்திய நபர்களை அடையாளம் காண தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டத்தைக் கையில் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் தொடர்ந்து அதிகரிக்கும் இத்தகைய சம்பவங்கள், பெண் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளன.




