இலங்கையில் இருந்து விடைபெறுகிறார் சீனத் தூதுவர்
இலங்கைக்கான சீனத் தூதுவர் பதவியிலிருந்து பிரியாவிடை பெற்றுச் செல்லவிருக்கும் கீ சென்ஹொங் , சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவை பாராளுமன்ற சந்தித்து கலந்துரையாடினார்.
தூதுவரை வரவேற்ற சபாநாயகர், இலங்கையில் தூதுவராகப் பணியாற்றிய காலப்பகுதியில் அவர் அர்ப்பணிப்புடன் ஆற்றிய சேவைக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கு தூதுவர் வழங்கிய பங்களிப்பையும் பாராட்டினார்.
இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் தூதுவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், அவரது சேவை இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவின் அடையாளமாக அமைந்துள்ளது என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு பல்வேறு துறைகளில் சீன அரசாங்கமும் மக்களும் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவுக்கு சபாநாயகர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கைக்கு சீனா வழங்கி வரும் அசைக்க முடியாத நட்பும் ஆதரவும் காரணமாக, கிராமப்புற சமூகங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் மதிப்பையும் அன்பையும் சீனத் தூதுவர் கீ சென்ஹொங் வென்றிருப்பதாகத் தெரிவித்தார்.




