ஆஸ்திரேலியாவில் புதிய சமூக ஊடக சட்டம்: பயனர்களுக்கு முழு கட்டுப்பாடு
சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை உத்தரவைத் தொடர்ந்து, இணையப் பாதுகாப்பை மேம்படுத்தும் தனது அடுத்தகட்ட முயற்சியாக, சமூக ஊடகப் பயனர்கள் தங்கள் முகப்புப் பக்கங்களில் (feeds) பார்க்கும் உள்ளடக்கங்களைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குவதற்கான சட்ட முன்மொழிவை ஆஸ்திரேலியா செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
மத்திய-இடதுசாரி தொழிற்கட்சி (Labor government) அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இந்த வரைவுச் சட்டங்களின் கீழ், சமூக ஊடக தளங்கள் பயனர்களுக்குத் அறியத் தருவதோடு, அவர்களின் இயல்புநிலை முகப்புப் பக்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் வழங்க வேண்டும்.
பயனர்கள் அல்காரிதம் (algorithm) மூலம் பரிந்துரைக்கப்படும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கங்களைச் சேர்க்க விருப்பம் தெரிவிக்கலாம் (Opt-in). அல்லது அல்காரிதம் பரிந்துரைகளை நிராகரித்து (Opt-out), தாங்கள் பின்தொடர விரும்பும் நண்பர்கள் மற்றும் படைப்பாளர்களின் (creators) பதிவுகளை மட்டுமே பார்க்கத் தேர்வு செய்யலாம்.
“இது ஒரு விவேகமான, நடைமுறைக்கு சாத்தியமான சீர்திருத்தமாகும்,” என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“இது பயனர்களுக்குத் தேர்வு உரிமையை வழங்குவதுடன், நமது சட்டங்களைப் பின்பற்றாத பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் செயலற்ற தன்மைக்குப் பொறுப்பேற்கச் செய்யும்” என்றும் அவர் கூறினார்.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta Platforms) மற்றும் ஆல்பபெட்டின் கூகுள் (Google) ஆகிய நிறுவனங்கள் கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
2024 முதல் பயனர்கள் தங்கள் சுயவிவரப் பகுப்பாய்வு (profiling) அமைப்பை முடக்கும் விருப்பத்தை வழங்குமாறு தளங்களைக் கோரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் (EU Digital Services Act) அடிச்சுவட்டை ஆஸ்திரேலியா பின்பற்றுகிறது.
இருப்பினும், பயனர்கள் எளிதாக வெளியேறுவதற்கான (opt-out) வழிகளை தளங்கள் எளிமையாக்கவில்லை என்று ஒழுங்குமுறை அமைப்புகள் குற்றம் சாட்டியதால், அதன் அமலாக்கம் தொடக்கத்தில் சில சிக்கல்களைச் சந்தித்தது.
தொடர்ச்சியாக ஒரே மாதிரியான உள்ளடக்கங்களை நோக்கி பயனர்களை ஈர்த்து அடிமையாக்கும் நடத்தையை ஊக்குவிக்கும் வகையில் அல்காரிதம்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக எழும் கவலைகள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள சமூக ஊடக நிறுவனங்கள் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளன.
“மை பீட், மை வே” (My Feed, My Way) என்ற இந்த முயற்சி, ஆஸ்திரேலிய பயனர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிந்து, அவற்றைத் தடுப்பதற்குத் தொழில்நுட்பத் தளங்கள் எடுத்த நடவடிக்கைகளை ஆவணப்படுத்தவும், அந்த நடவடிக்கைகள் காலப்போக்கில் திறம்படச் செயல்படுவதை உறுதிசெய்யவும் வலியுறுத்தும் என்று அல்பானீஸ் கூறினார்.
இச்சட்டத்தை மீறினால் 109.2 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ($79 மில்லியன்) வரை அபராதம் விதிக்கப்படலாம். ஆஸ்திரேலியாவின் இணைய ஒழுங்குமுறை அமைப்பான ‘ஈ-சேஃப்டி’ (eSafety) இதன் அமலாக்கத்திற்கும் இணக்கத்திற்கும் பொறுப்பேற்கும்.
தீங்கு விளைவிக்கும், ஆபாசம் தொடர்பான மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களை உடனடியாக அகற்றுமாறு பிக்டெக் (Big Tech) நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் அதிகாரமும் ‘ஈ-சேஃப்டி’ அமைப்புக்கு வழங்கப்படும்.
இருப்பினும், முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தக் கூடும் என கருத்துச் சுதந்திர ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளனர்.
“இது அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிப்பதைப் பற்றியது அல்ல; மக்களுக்கு அதிகாரம் அளிப்பதைப் பற்றியது” என்று அல்பானீஸ் தெரிவித்தார்.
வரைவுச் சட்டம் குறித்து டிஜிட்டல் தளங்கள், தொழில் அமைப்புகள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஆதரவாளர்களிடம் இருந்து அரசாங்கம் கருத்துக்களைக் கோரவுள்ளது.
இந்த மசோதா நடப்பாண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




