தமிழின அழிப்பின் உறுதியான சாட்சியே செம்மணி
தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாக செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
தமிழர்கள் மீது புரியப்பட்ட இந்த இனப்படுகொலையைச் சர்வதேச சமூகம் இனியாவது ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதையே இந்தப் புதைகுழியில் இருந்து மீட்டெடுக்கப்படும் என்புத் தொகுதிகள் உலகுக்குப் பறைசாற்றுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மனித எச்சங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“செம்மணி மனிதப் புதைகுழியில் மிகக் குறுகிய நாள்களுக்குள் 380 மனித என்புத் தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கை வரலாற்றிலேயே மிக அதிகப்படியான மனிதப் பேரவலம் அரங்கேறிய ஒரேயொரு புதைகுழியாகவும், தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான நேரடிச் சாட்சியமாகவும் இந்தச் செம்மணித் தளம் இன்று மாறியுள்ளது.
இங்கு இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் என்புத் தொகுதிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் எனப் பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில், உலகத்தினுடைய மனச்சாட்சியையே உலுக்கிக் கிளறிவிடுகின்ற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த களமாக இந்தச் செம்மணி மனிதப் புதைகுழி அமையப் போகிறது.
சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் உடனடியாகத் தங்களின் மேலான கரிசனையைச் செலுத்த வேண்டும்.
எத்தனையோ இழப்புக்களைச் சந்தித்து, இன்றுவரை ஏமாற்றப்பட்டு வரும் தமிழ் மக்களுக்கான உண்மையான நீதியைப் பெற்றுத் தருகின்ற ஓர் அணையாத சுடராகவும், தமிழ் மக்களுடைய நீதிக்கான ஒரு பிரதான திறவுகோலாகவும் இந்தச் செம்மணி அமைய வேண்டும் என்பதே எங்களின் பலத்த எதிர்பார்ப்பாகும்.” – என்றார்.





