பௌத்தர்களே ஒன்றுபடுங்கள்: முறுத்தெட்டுவ ஆனந்த தேரர் அறைகூவல்
பிளவுபட்டு நிற்காமல், தமது அடையாளம் மற்றும் மரபுரிமைகளைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அனைத்து பௌத்த மக்களும் ஒன்றுபட வேண்டும் என்று அபயராம விகாரையின் விகாராதிபதி முறுத்தெட்டுவே ஆனந்த தேரர் அறைகூவல் விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
“எவராவது தவறிழைத்தால் சட்டத்தின் முன் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்ற விடயத்தில் நாம் உறுதியாக இருக்கின்றோம். ஆனால், இப்படியொரு தண்டனையை எதிர்கொள்ளும் அளவுக்கு ஞானசார தேரர் தவறிழைக்கவில்லை என்றே நாம் நம்புகின்றோம்.
அவரது துறவற ஆடையை அகற்றுவதற்கு முன்னர் அது குறித்து மகாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அவர்களின் ஆலோசனைக்கமையச் செயற்பட்டிருந்தால் இப்பிரச்சினை இன்று தலைதூக்கியிருக்காது.
பாலில் துளி சாணம் கலந்ததுபோல ஒரு செயல் இங்கு நடந்துள்ளது. துறவற ஆடை அகற்றப்பட்ட இச்சம்பவத்தை உண்மையான பௌத்தர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, ஞானசார தேரர் விவகாரத்தில் இடம்பெற்ற தவறை ஜனாதிபதி சீர்செய்தால், பௌத்த மக்கள் மத்தியில் அவருக்கான நன்மதிப்பு அதிகரிக்கும்.
முன்னர் ஜே.வி.பி. கட்சியினர் தடை செய்யப்பட்டபோது, அவர்களுக்கு ஆதரவாக நான்தான் முன்னின்று குரல் கொடுத்தேன். இப்படிப் பல பிரச்சினைகளின்போது மகாசங்கத்தினர் முன்னின்று செயற்பட்டுள்ளனர். எனவே, வரலாற்று ரீதியான இச்சம்பவங்களை யாரும் மறந்துவிடக் கூடாது.
பௌத்த மக்கள் இன்று அரசியல், குலம் மற்றும் சமூக ரீதியில் பிளவுபட்டுள்ளனர். இதுவே அழிவுக்கான ஆரம்பமாக அமையும்.
எனவே, ஆட்சியைப் பிடிப்பதற்கோ அல்லது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கோ அல்லாமல், தமது அடையாளம், பௌத்தர்களுக்குரிய மரபுரிமைகள், பிக்குகளுக்கான உரிமைகள் மற்றும் பௌத்த சாசனத்தின் முக்கியத்துவம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அனைத்து பௌத்த மக்களும் ஒன்றுபட வேண்டும்,” என்றார் முறுத்தெட்டுவே ஆனந்த தேரர்.





