பார்முலா 1 வரலாற்றில் புதிய அத்தியாயம்: உலகமே வியந்து பார்த்த ஈழத்தமிழர் அருண் ராஜ்குமார்
Austrian Grand Prix கார் பந்தய வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, Mercedes அணியின் சார்பில் மேடைக்குச் சென்று, தயாரிப்பாளர்களுக்கான (Constructors’) வெற்றிக் கிண்ணத்தை ஏந்திய பிரித்தானிய தமிழ் பொறியியலாளரான அருண் ராஜ்குமார் , உலகளவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஈழத்தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த அருண் ராஜ்குமார், மெர்சிடிஸ் அணியின் ‘ட்ராக்சைட் பவர் யூனிட்’ (Trackside Power Unit) பொறியியலாளராகப் பணியாற்றுகிறார்.
மெர்சிடிஸ் மற்றும் அதன் வாடிக்கையாளர் அணிகளுக்கான பார்முலா 1 எஞ்சின்களை வடிவமைத்தல், தயாரித்தல் மற்றும் சோதிக்கும் பிரிக்ஸ்வொர்த் (Brixworth) தளத்தில் உள்ள பிரிவிலேயே இவர் பணியாற்றி வருகின்றார்.
ஸ்பீல்பெர்க்கில் உள்ள ரெட் புல் ரிங் (Red Bull Ring) மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரிய கிராண்ட் பிரீ பந்தயத்தில், மெர்சிடிஸ் அணியின் ஜார்ஜ் ரஸ்ஸல் (George Russell) முதலிடத்தைப் பெற்று வெற்றி வாகை சூடினார்.
ரெட் புல் அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen) இரண்டாம் இடத்தையும், மெர்சிடிஸ் அணியின் கிமி ஆண்டோனெல்லி (Kimi Antonelli) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
மெர்சிடிஸ் அணிக்கு இது ஒரு சிறப்பான வெற்றியாக அமைந்தது.
போல் பொசிஷனில் (Pole position) இருந்து பந்தயத்தைத் தொடங்கிய ரஸ்ஸல் அதனை வெற்றியாக மாற்றியதோடு, ஆண்டோனெல்லியின் மூன்றாவது இடமும் இணைந்து தயாரிப்பாளர்கள் சாம்பியன்ஷிப் (Constructors’ Championship) புள்ளிகள் பட்டியலில் மெர்சிடிஸ் அணியின் முன்னிலையை மேலும் வலுப்படுத்தியது.
வழக்கமாக ஓட்டுநர்கள் மட்டுமே கவனம்பெறும் இந்த மேடையில், காரின் செயல்திறனுக்குப் பின்னால் இருக்கும் ஒரு பொறியியலாளரான அருண் ராஜ்குமார் கொண்டாட்டத்தின் மையப்புள்ளியாக மாறியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஒவ்வொரு கிராண்ட் பிரீ பந்தயத்திலும் வெற்றி பெறும் அணியின் சார்பில் அதன் பிரதிநிதியாக ஒரு ஊழியர் மேடைக்கு அனுப்பப்பட்டு, கிண்ணத்தைப் பெறுவது வழக்கம். அந்த வகையில், ஆஸ்திரியாவில் மெர்சிடிஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமை அருண் ராஜ்குமாருக்குக் கிடைத்தது.
ரஸ்ஸல், வெர்ஸ்டாப்பன் மற்றும் ஆண்டோனெல்லி ஆகியோருடன் அருண் ராஜ்குமார் மேடையில் நிற்கும் புகைப்படங்களை உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெருமையுடன் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
அருணின் சாதனைப் பயணம்
பார்முலா 1 உலகிற்குள் அருண் ராஜ்குமாரின் நுழைவு எளிதாக நடந்துவிடவில்லை.
பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் (University of Birmingham) இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) பயின்ற அவர், தனது படிப்பின் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒரு பயிற்சி மாணவராக மெர்சிடிஸ் நிறுவனத்தில் இணைந்தார்.
அந்தப் பயிற்சியின் போது தயாரிப்பு மற்றும் சோதனைப் பொறியியல் பிரிவுகளில் பணிபுரிந்து எஞ்சின் வடிவமைப்பு, அதன் நம்பகத்தன்மை மற்றும் சோதனைகளில் அனுபவத்தைப் பெற்றார்.
பின்னர் அதே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி, படிப்படியாக உயர்ந்து தற்போது ‘ட்ராக்சைட் பவர் யூனிட்’ பொறியியலாளராக மாறியுள்ளார்.
இந்த பொறுப்பில் இருக்கும் அருண், பந்தயம் நடைபெறும் வார இறுதி நாட்களில் மெர்சிடிஸ் எஞ்சின்களின் செயல்திறனைக் கண்காணித்து, தரவுகளை ஆராய்ந்து, காரின் வேகத்தை மேம்படுத்தும் அதிவேகச் சூழலில் பணியாற்றி வருகிறார்.
1995 முதல் மெர்சிடிஸ் அணியின் அனைத்து எஞ்சின்களையும் தயாரித்து வரும் பிரிக்ஸ்வொர்த் குழுவின் வரலாற்றுப் பின்னணியில், தற்போது ஒரு தமிழ் மாணவனின் இந்த சாதனைப் பயணம் புதியதொரு அத்தியாயத்தை எழுதியுள்ளது.





