காம்பியாவில் போராட்டம் நடத்த தடை – காவல்துறைத் தலைவர் கடும் தொனியில் எச்சரிக்கை
காம்பியாவில் முறையான அனுமதியின்றி போராட்டங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெப்ப அலை காரணமாக நீண்ட நேரம் அமுல்படுத்தப்படும் மின் வெட்டை கண்டித்து மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இந்நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகைக் குண்டுகளை பிரயோகித்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே மேற்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
“இக்கணமே, அங்கீகரிக்கப்பட்ட அனுமதி இல்லாமல் யாரும் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டார்கள்,” என்று காம்பியாவின் காவல்துறைத் தலைவர் சீடி முக்தார் டூரே (Seedy Mukhtar Touray) தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இரவு நேரங்களில், யாரும் ஒன்றுகூடவோ, கலவரத்தை ஏற்படுத்தவோ அல்லது நாட்டின் அமைதி மற்றும் நிம்மதியைக் குலைக்கவோ அனுமதிக்கப்படமாட்டார்கள். இதை மீறுபவர்கள் மீது தேவைப்பட்டால் பலப்பிரயோகம் செய்யப்படும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரும் டிசம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த போராட்டங்கள் அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




