தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை
தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு உட்பட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்று மேற்படி உத்தரவு வழங்கப்பட்டது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார்.
அதேபோல, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ -சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதாக முன்வைக்கப்பட்ட வாதங்களை ஆராய வேண்டியுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, சட்டப்பேரவை செயலாளர், முதல்வர் விஜய், எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர், ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜூலை 31-ஆம் திகதிக்கு தள்ளிவைத்தனர்.
அதுவரை, இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளனர்.




