கொங்கோவில் கட்டுக்கடங்காத எபோலா பரவல்; 12,000 ஐ கடந்த தொற்றாளர்கள்
ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 12,000ஐக் கடந்துள்ளதுடன், இதுவரை 5,904 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் வடகிழக்கு கொங்கோவின் இடுரி மாகாணத்தில் ஆரம்பமான இந்தத் தொற்று, தற்போது நாட்டின் 26 மாகாணங்களில் எட்டு மாகாணங்களுக்குப் பரவியுள்ளது. இதுவரை 12,021 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகப் பதிவாகியுள்ளது.
பண்டிபுக்யோ (Bundibugyo) எனப்படும் அரிய வகை எபோலா வைரஸால் இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் வகைக்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சை முறைகளோ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிவதில் ஏற்பட்ட தாமதம், ஆயுத மோதல்கள் மற்றும் சுகாதார சேவைகளில் நிலவும் நெருக்கடிகள் ஆகியவை வைரஸ் வேகமாகப் பரவுவதற்குக் காரணமாக அமைந்துள்ளன.
குறிப்பாக, கிழக்கு கொங்கோவில் தீவிரமடைந்துள்ள ஆயுத மோதல்கள் காரணமாக, எபோலா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் சிலர் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகளை அடையாளம் காணுதல், தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணித்தல் மற்றும் சிகிச்சை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
புதிய தொற்றாளர்களில் சுமார் 15 சதவீதமானோர் மாத்திரமே சுகாதார அதிகாரிகளால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொடர்பாளர்களாக உள்ளனர். இதனால் தொற்று பரவும் பல வழித்தடங்கள் இன்னமும் கண்டறியப்படாமல் இருப்பதாக ஆபிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை மேற்கு ஆபிரிக்காவில் ஏற்பட்ட எபோலா பரவலில் 28,600க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதுடன், 11,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதற்குப் பின்னர் பதிவான மிகப்பெரிய எபோலா பரவலாகவும், கொங்கோவின் வரலாற்றில் மிக மோசமான பரவலாகவும் தற்போதைய நிலைமை கருதப்படுகிறது.
இதற்கிடையில், கொங்கோவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகளில் உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வத் தரவுகளைவிட அதிகமாக இருக்கலாம் என ரொய்ட்டர்ஸ் மேற்கொண்ட செயற்கைக்கோள் பட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




